ஒரு லட்சம் அரசு ஊழியர்களை நீக்கும் வியட்நாம் அதிரடியில் அமெரிக்காவை விஞ்சுகிறது
ஒரு லட்சம் அரசு ஊழியர்களை நீக்கும் வியட்நாம் அதிரடியில் அமெரிக்காவை விஞ்சுகிறது
ADDED : பிப் 20, 2025 11:41 PM

அமெரிக்க பொருளாதாரத்தை சீர் செய்வதாக, அதிபர் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் வெளியிடும் அதிரடி அறிவிப்புகள் தான், உலகின் இப்போதைய ஹாட் டாப்பிக். ஆனால், இவர்களுக்கு முன்பாகவே, வியட்நாம் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கி விட்டது என்பது பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அவற்றில் மிக முக்கியமான நடவடிக்கை, அரசு துறைகளில் ஆட்குறைப்பு. இன்னும் ஒரே வாரத்தில் அங்கிருக்கும் ஒரு லட்சம் அரசுப் பணியாளர்கள் வேலையை இழக்க உள்ளனர். அதாவது, ஐந்தில் ஒரு அரசு ஊழியரை பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிபராக, டோ லாம் கடந்த ஆண்டு பொறுப்பேற்றது முதலே, நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கினார். அரசுப் பணி என்பது பலவீனமானவர்களின் பாதுகாப்பான சொர்க்கமாக இருக்கக்கூடாது என, கடந்த டிசம்பரில் முழங்கினார்.
அதற்கேற்ப, அரசுப் பணிகளில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் உள்ள நிலையில், 20 சதவீதம் பேர் ஐந்து ஆண்டுகளில் பணிநீக்கம் செய்யப்படுவர் என, அதிரடியாக அறிவித்தார். முதற்கட்டமாக, மார்ச் ஒன்றாம் தேதி, ஒரு லட்சம் ஊழியர்கள் நீக்கப்படுகின்றனர்.
கம்யூனிஸ்ட் அரசு என்றாலே, தொழிலாளர் பாதுகாப்பு, நலன், வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் தரக்கூடியது என்ற பரவலான கருத்துக்கு இடையே, வியட்நாமில் இது நடந்திருக்கிறது.
ஐந்து ஆண்டுகளில் நான்கு லட்சம் பணியாளர்களை குறைக்கும் வகையில், அமைச்சகங்களின் எண்ணிக்கையையும் 18ல் இருந்து 14 ஆக குறைத்துள்ளார், டோ லாம். இந்த நான்கு அமைச்சகங்களில் அரசு ஊடகத்துறை, பணியாளர் துறை, போலீஸ், ராணுவம் ஆகிய துறைகளும் இடம்பெற்றுள்ளன.
போக்குவரத்து, திட்டமிடல், தொலைத்தொடர்பு, தொழிலாளர் நலம் ஆகியவையும் கத்தரியில் சிக்கிய துறைகள்.ஆட்சிக்கு வந்ததுமே, லஞ்ச, ஊழலுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றத் துவங்கினார் டோ லாம். மூன்று துணை பிரதமர்கள், இரண்டு மண்டல கட்சித் தலைவர்கள், டஜனுக்கு மேற்பட்ட அரசு அதிகாரிகள் சிக்கினர்.அரசின் சிக்கன நடவடிக்கை உள்ளிட்டவற்றை சேர்த்து, ஜி.டி.பி., வளர்ச்சியை 8 சதவீதமாக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளார், டோ லாம்; 97 சதவீத ஏற்றுமதி, 90 சதவீத இறக்குமதி என வர்த்தக உபரி நாடான வியட்நாம், அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதி நாடாக உள்ளது.
சீனா, மெக்சிகோ, ஐரோப்பிய யூனியன், இந்தியா என பல நாடுகளுக்கு டிரம்ப் கூடுதல் வரி விதித்து வரும் நிலையில், இந்நாட்டுக்கு என்ன வைத்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஒருவேளை கூடுதல் வரி விதிக்கப்பட்டால், அதை சமாளிக்கவும் வியட்நாம் ஆட்சியாளர் வேறு திட்டம் வைத்திருப்பார் என எதிர்பார்க்கலாம்.
 எட்டு துறைகளைக் கொண்ட நான்கு அமைச்சகங்கள் நீக்கம்; 18ல் இருந்து 14 ஆக குறைப்பு
 மக்கள்தொகை 10 கோடி கொண்ட வியட்நாமில், 20 லட்சம் பேர் அரசு ஊழியர்கள்
 அடுத்த ஐந்து ஆண்டுகளில், நான்கு லட்சம் அரசு ஊழியர்கள் நீக்கப்படுவர்
 முதற்கட்டமாக, வரும் மார்ச் 1ல் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் பணியிழப்பர்.
ஆரோக்கியத்தை பெற வேண்டுமானால், சிலநேரம் கசப்பு மருந்துகள் தேவை.  உடலில் கட்டி ஏற்பட்டால் வலியை போக்க அதை அகற்றியே தீர வேண்டும். அதுபோலவே, தேவைப்பட்டால் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
-டோ லாம், அதிபர், வியட்நாம்

