ADDED : ஜூன் 18, 2025 11:53 PM

புதுடில்லி:உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் போட்டி வர்த்தக நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, சாட்காம் எனப்படும் செயற்கைக்கோள் இணைய சேவையை, வோடபோன் ஐடியா நிறுவனம் இந்தியாவில் வழங்கவுள்ளது.
இதற்காக, ஏ.எஸ்.டி., ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக வோடபோன் ஐடியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில், தொலைத்தொடர்பு சேவையில் இணைக்கப்படாத பகுதிகளையும் இணைக்கும் வகையில், செயற்கைக்கோள் வழி இணைய வசதியை வழங்க இது வகை செய்கிறது.
விண்வெளியில் இருந்து வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்பை முதன்முதலில் ஏ.எஸ்.டி., ஸ்பேஸ்மொபைல் சாத்தியமாக்கி, வரலாறு படைத்ததாகவும்; இந்தியாவிலும் ஸ்மார்ட்போன்களில் நேரடி சேவையை வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் வழி இணைய சேவை வழங்க, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அண்மையில் அரசின் அனுமதியை பெற்றது.
அதன் சேவைகளில் சிலவற்றை ஒப்பந்தம் வாயிலாக, நாட்டின் முன்னணி தொலைபேசி நிறுவனமான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை வழங்க உள்ளன.