ADDED : பிப் 17, 2024 01:05 AM

புதுடில்லி:'போக்ஸ்வேகன்' நிறுவனத்தின் மின்சார பாகங்கள், பேட்டரி செல் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில், 'மஹிந்திரா' நிறுவனம் கையெழுத்திட்டு உள்ளது.
மின்சார வாகனங்களுக்கான பொது வாகன தளம் ஒன்றை போக்ஸ்வேகன் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இக்குழுமத்தின் கீழ் உள்ள ஸ்கோடா, ஆடி உள்ளிட்ட நிறுவன கார்களை தயாரிப்பதற்காக, இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் வாயிலாக, போக்ஸ்வேகன், அதன் மின்சார தொழில்நுட்பம் மற்றும் பாகங்களை, மற்ற கார் தயாரிப்பாளர்களுக்கும் வழங்க உள்ளது.
அந்த வகையில் மஹிந்திரா நிறுவனம், இந்நிறு வனத்தின் சில பாகங்கள் மற்றும் 'இன்க்லோ' எனும் போக்ஸ்வேகன் நிறுவன பேட்டரி செல் போன்றவற்றை தன் தயாரிப்புக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தற்போது இதற்கான வழங்கல் ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டு உள்ளன.
இதையடுத்து, நேற்றைய தேசிய பங்கு சந்தையின் வர்த்தக நேரத்தில், மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு விலை, 1,865 ரூபாய் என்ற 52 வார உச்சத்தை எட்டியது. பின் வர்த்தக நேர முடிவில், 1,838 ரூபாயாக நிலைபெற்றது.