மருத்துவ காப்பீடு பிரிமியம் உயர்வை சமாளிக்கும் வழிகள்
மருத்துவ காப்பீடு பிரிமியம் உயர்வை சமாளிக்கும் வழிகள்
ADDED : ஜன 22, 2024 12:52 AM

மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரிப்பது, மருத்துவ காப்பீடு பிரிமியம் தொகையையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
நிதி பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆயுல் காப்பீட்டுடன், மருத்துவ காப்பீடும் முக்கிய பங்கு வகிக்கிறது. போதுமான மருத்துவ காப்பீடு பெற்றிருந்தால், எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்கலாம். மருத்துவ காப்பீடு பாதுகாப்பை அளிப்பதாக அமைந்தாலும், அண்மை ஆண்டுகளில் ஏற்பட்டு வரும் மருத்துவ பணவீக்க உயர்வு காரணமாக, காப்பீடு பாலிசிகளின் பிரிமியம் கணிசமாக உயரத் துவங்கியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு, நுகர்வோர் விலைப் பட்டியலை விட மருத்துவ பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்து இருக்கிறது. இதன் காரணமாக, மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் தனிநபர் மற்றும் குழு பாலிசிகளுக்கான பிரிமியம் தொகையை கணிசமாக உயர்த்தியுள்ளன.
ஆய்வு தேவை
மருத்துவ காப்பீடு பிரிமியம் அதிகரித்திருப்பது, வரவு - செலவு திட்டமிடலையும் பாதித்துள்ளது. குறிப்பாக பாலிசியை புதுப்பிக்கும் போது பிரிமியம் தொகை உயர்வு, பட்ஜெட்டில் துண்டு விழச் செய்யலாம். எனவே, அதிகரிக்கும் பிரிமியம் தொகையை சமாளிக்கும் வழிகளை கண்டறிவது அவசியம்.
இதற்காக முதலில் செய்ய வேண்டியது தற்போதைய பாலிசியின் அம்சங்களை கவனமாக ஆய்வு செய்வதாகும். இதன் மூலம், தேவையில்லாத அம்சங்களுக்காக கட்டணம் செலுத்திக் கொண்டிருக்கிறோமா என பார்க்க வேண்டும்.
பாலிசி அளிக்கும் பாதுகாப்பை பாதிக்காத வகையில் பாலிசியில் மாற்றம் செய்து, தொகையை குறைக்க முடியுமா என ஆராய வேண்டும். அடுத்ததாக சந்தையில் உள்ள மற்ற பாலிசிகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். வேறு ஒரு நிறுவனம் அதே அம்சங்களோடு குறைந்த பிரிமியத்தில் பாலிசி வழங்கினால் அதற்கு மாறுவது பற்றி பரிசீலிக்கலாம்.
பல்வேறு பாலிசிகளை ஒப்பிட்டு பார்த்து தீர்மானிக்க வேண்டும். பாலிசிகளில் குறிப்பிடப்படும், விலக்கப்படும் அம்சங்களையும் கவனிக்க வேண்டும். புதிய பாலிசிகளில் இந்த அம்சங்கள் இல்லாமல் போகலாம். இந்த சூழலில் ரைடர்கள் பொருத்தமாக இருக்குமா என்பதையும் பரிசீலிக்க வேண்டும்.
போனஸ் சலுகை
பாலிசியில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கோரிக்கைகளை சமர்ப்பிக்காமல் இருப்பதற்காக 'நோ கிளைம் போனஸ்' வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பயன்படுத்தி பிரிமியம் தொகையை குறைக்கலாம்.
ஒரு சில காப்பீடு நிறுவனங்கள் இதற்காக தள்ளுபடியும் அளிக்கின்றன. மேலும் சில காப்பீடு நிறுவனங்கள் ஆரோக்கியமான வாழ்வியலுக்கான சலுகைகளும் அளிக்கின்றன. அவை உங்கள் பாலிசிக்கு பொருந்துமா என பார்க்க வேண்டும்.
அதே நேரத்தில் காப்பீடு நிறுவனத்துடன் பேசி பார்ப்பதும் முக்கியம். பாலிசிகளை ஒப்பிட்டு பார்த்து, பிரிமியம் தொகையை குறைக்க வாய்ப்புள்ளதா என நிறுவனத்திடம் கேட்டு பார்க்கலாம். பல நேரங்களில், உறுதியாக பேசினால் பலன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
முக்கியமாக மருத்துவ பாலிசிகள் தொடர்பாக அரசின் கொள்கை முடிவுகளை கவனித்து வர வேண்டும். காப்பீடு உலகின் போக்குகளை அறிவதன் மூலம், வரவிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப திட்டமிடலாம். தகவல் சார்ந்த முடிவு எடுப்பதிலும் இந்த விழிப்புணர்வு உதவும்.
மருத்துவ காப்பீடு பிரிமியம் உயர்வு சவாலாக அமைந்தாலும், சரியான அணுகுமுறை மற்றும் திட்டமிடல் மூலம் இதை எதிர்கொள்வது அவசியம். செலவை கட்டுப்படுத்துவதோடு, பாலிசி பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.