ஓய்வுகாலத்திற்கு முன் கடன் சுமையில் இருந்து விடுபடும் வழிகள்
ஓய்வுகாலத்திற்கு முன் கடன் சுமையில் இருந்து விடுபடும் வழிகள்
ADDED : நவ 11, 2024 12:42 AM

சொந்த வீடு, பிள்ளைகள் கல்வி போலவே ஓய்வுகால திட்டமிடலும் முக்கிய நிதி இலக்குகளில் ஒன்றாக அமைகிறது. ஓய்வு காலத்தில் நிம்மதியான வாழ்க்கைக்கு இது வழிவகுக்கிறது. ஓய்வுகால திட்டமிடலை இயன்ற அளவு முன்னதாகவே துவக்குவது முக்கியம் என்பதோடு, ஓய்வு பெறுவதற்கு முன் கடன் சுமையில் இருந்து விடுபட்டிருப்பதும் அவசியம்.
கடன் சுமை இல்லாதது நிதி சுதந்திரம் அளித்து மன நிம்மதியும் அளிக்கும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்றியமையாதது. கடன் சுமை இருந்தால், ஓய்வு காலத்திற்கு முன் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள்:
செலவுகள்:
எந்த நிதி இலக்காக இருந்தாலும், அதை அடைவதில் பட்ஜெட் முக்கிய பங்கு வகிக்கிறது. கடன் சுமையை குறைக்கவும் பட்ஜெட் அவசியம். வருமானம் மற்றும் செலவுகளை அலசிப்பார்த்து அதற்கேற்ற பட்ஜெட் வகுத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைக்க வழி காண வேண்டும்.
பணம் செலுத்துதல்:
கடன் சுமையை குறைக்க மாதத்தவணையை செலுத்தி வந்தால் மட்டும் போதாது. வாய்ப்பிருந்தால் கூடுதல் தொகை செலுத்த வேண்டும். இல்லை இதற்கான வாய்ப்பை
ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். பல கடன்கள் இருந்தால், முன்னுரிமை அடிப்படையில் அடைக்க வேண்டும்.
நிதி நிலை:
நிலுவையில் உள்ள கடன்கள், வட்டி விகிதம் உள்ளிட்ட அம்சங்களை பரிசீலித்து தற்போதைய நிதி நிலையை ஆய்வு செய்ய வேண்டும். நிதி ஆதாரத்திற்கு ஏற்ப கடன்களை அடைக்க முயல்வதோடு, பயன்படுத்தாத மதிப்புள்ள பொருட்கள் இருந்தால் அவற்றை விற்று அந்த தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பகுதிநேர வேலை:
தேவை எனில், முழு நேர வேலை தவிர பகுதி நேர வேலை மூலம் கூடுதலாக வருமானம் ஈட்ட முயற்சிக்கலாம். இந்த தொகை கடன் சுமையை குறைக்க உதவும். பணி
அனுபவத்துடன் இணைந்த ஆலோசனை போன்ற வேலைவாய்ப்புகளையும் இதற்காக நாடலாம்.
ஊக்கம் தேவை:
கடனில் இருந்து விடுபடுவது நிதி சுதந்திரம் பெற உதவும் எனும் அம்சத்தை நினைவில் கொள்வது, இந்த பயணத்திற்கு தேவையான ஊக்கத்தை அளிக்கும். கடனை அடைக்கும் இலக்கில் ஏற்படும் சிறிய முன்னேற்றங்களை கொண்டாடி மகிழ்வதும் தேவையான உறுதி, ஊக்கத்தை அளிக்கும்.