ADDED : ஜூலை 06, 2025 08:06 PM

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், இந்த முறைசெப்டம்பர் மாதம் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி படிவங்களில் ஏற்பட்டு உள்ள மாற்றம், அதற்கேற்ப மென்பொருள் அமைப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட காரணங்களினால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வருமான வரி ரீபண்ட் கிடைப்பது தாமதமாகலாம் மற்றும் கூடுதல் வட்டி கிடைப்பதும் சாத்தியமாகலாம். அதே நேரத்தில், வரித்தாக்கலில் தவறுகள் இருந்தால் அதிக அபராதம் செலுத்தும் அபாயமும் இருக்கிறது. தவறுகளை தவிர்த்து, பலன்களை அதிகமாக்குவதற்கான வழிகளை பார்க்கலாம்.
சரியான நேரம்:
வருமான வரித்தாக்கலில் பலன் பெறுவதற்கான அடிப்படையான தேவை உரிய காலத்தில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது தான். அதே நேரத்தில் சரியான படிவத்தை தேர்வு செய்து தவறுகள் இல்லாமல் தாக்கல் செய்வதும் மிகவும் முக்கியம்.
சரியான தகவல்கள்:
வருமான வரி தொடர்பாக தேவையான தகவல்களை சரியாக அளிக்க வேண்டும். வங்கி கணக்கு எண் போன்றவற்றை சரி பார்க்க வேண்டும். சிறு தவறு இருந்தால் கூட தாமதம் உண்டாக அல்லது ரீபண்ட் ரத்தாக வாய்ப்புள்ளது. சீக்கிரம் தாக்கல் செய்தால், செயல்முறையும் உடனே துவங்கலாம்.
அதிக பலன்:
வருமான வரித்துறை பிடித்தம் செய்த வரி ரீபண்ட் செய்யப்படும் நிலை இருந்தால், அதில் ஏற்படும் தாமதத்திற்கு வட்டி அளிக்கப்படும். இந்த முறை நீட்டிப்பு காரணமாக, வழக்கத்தை விட தாமத வட்டி அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது என்கின்றனர். இந்த பலன் 33 சதவீதம் வரை அமையலாம்.
கழிவுகள் கவனம்:
அதே நேரத்தில், வரித்தாக்கலின் போது பிடித்தம் அல்லது கழிவுகளில் தவறுகள் இருந்தால் அதற்கான அபராதமும் அதிகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடித்தம்
கோருவதாக இருந்தால் அதற்கேற்ற ஆவணங்கள் இருக்க வேண்டும். வருமானம் மறைக்கப்பட்டாலும் அபராதம் பொருந்தும்.
எச்சரிக்கை:
வரித்தாக்கல் தகவல்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் சரி பார்க்கப்படுகிறது. எனவே வரித்தாக்கல் செய்யும் முன், தவறான பிடித்தம் போன்றவை இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தகவல்கள், வருமான வரித்துறை ஆவணங்களில் உள்ளவற்றுடன் பொருந்துவதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.