குடும்பத்தில் நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் வழிகள்
குடும்பத்தில் நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் வழிகள்
ADDED : மே 04, 2025 07:04 PM

பணவீக்கம், வாழ்வியல் தேவைகள் உள்ளிட்ட காரணங்களினால் குடும்பத்தின் நிதி தேவைகளை சமாளிப்பதில் சிக்கல் ஏற்படலாம். அதிலும் குறிப்பாக, பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு பொறுப்பேற்கும் குடும்பங்களில் இந்த சிக்கல் அதிகமாகலாம். இதனால், எவ்வளவு தான் சம்பாதித்தாலும், போதிய அளவு சேமிக்க முடியவில்லை என்பதோடு, அதிகரிக்கும் செலவுகளும் நெருக்கடியை உண்டாக்கலாம்.
இதனால் நிதி பற்றாக்குறை ஏற்படுவதோடு, குடும்பத்தின் அமைதியும் பாதிக்கப்படலாம். எனவே, நிதி பற்றாக்குறையை திறம்பட எதிர்கொள்ளும் வழிகளை அறிந்திருப்பது அவசியம்.
நிதி உரையாடல்:
நிதி திட்டமிடலை பொறுத்தவரை வெளிப்படையான அணுகுமுறை அவசியம். பல குடும்பங்களில், பணம் தொடர்பான பிரச்னைகளை பேசுவதை தவிர்க்கின்றனர். செலவுகளை சமாளிக்கவேண்டும் எனில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நிதி நிலை குறித்து அறிந்திருக்க வேண்டும். வெளிப்படையான உரையாடல் பலன் தரும்.
நிதி பொறுப்பு:
தேவைகளுக்கு ஏற்ப நிதி வளத்தை செலவிட வேண்டிய சூழலில், நிதி முடிவுகளை குடும்பத்தினர்கலந்தாலோசித்து மேற்கொள்வது அவசியம். இதற்குவெளிப்படையான உரையாடல் கைகொடுக்கும். நிதி பற்றாக்குறை மேலும் பிரச்னைகளை உண்டாக்குவதையும் தவிர்க்க உதவும்.
செலவுகள் முன்னுரிமை:
நிதி பற்றாக்குறையை தவிர்க்க சிறந்த வழி, தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பதாகும். இதற்கு முக்கிய செலவுகளுக்கு முன்னுரிமை அளித்து, தவிர்க்க கூடிய செலவுகளை தள்ளிப்போட வேண்டும். குடும்பத்தினர் பங்கேற்பின் மூலம் இதை சாத்தியமாக்கலாம்.
எதிர்கால நலன்:
நிதி பற்றாக்குறையை சமாளிப்பது முக்கியம் என்றாலும், எதிர்கால நலனை மறந்துவிடக்கூடாது. சேமிப்பும், முதலீடும் அவசியம். ஓய்வுகால திட்டமிடலில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாராத நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கான அவசர கால நிதியை உருவாக்கி கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
கடன் நிர்வாகம்:
நிதி பற்றாக்குறை கடன் சுமையாக மாறாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கடன் வசதியை நாடுவதில் கவனம் தேவை. அதே போல, குறுகிய கால தேவைகளுக்காக முதலீடு போன்றவற்றில் கைவைப்பதையும் தவிர்க்க வேண்டும். இது நீண்டகால நலனை பாதிக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.