ADDED : மார் 21, 2025 11:26 PM
சென்னை; 'தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு அதிக பிரான்ஸ் நாட்டு நிறுவனங்களை வரவேற்கிறோம்' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இந்தியாவுக்கான பிரான்ஸ் துாதர் தியர்ரி மேத்தவ், புதுச்சேரி மற்றும் சென்னைக்கான பிரான்ஸ் துணை துாதர் எட்னே அடங்கிய குழுவினர், அமைச்சர் ராஜாவுடன் நேற்று முன்தினம் சந்தித்து பேசியுள்ளனர்.
இதுகுறித்து, ராஜா அறிக்கை: பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவது குறித்து, பிரான்ஸ் குழுவினருடன் விவாதிக்கப்பட்டது.
மாறி வரும் உலகளாவிய சூழலில், புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள தமிழகம் தயாராக உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பல நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. மேலும், தமிழகத்தில் முதலீடு செய்ய அதிக பிரான்ஸ் நிறுவனங்களை வரவேற்கிறோம். தமிழக இளைஞர்களுக்கு அதிக உயர்தர வேலைகளுக்கு வழிவகுக்கும் நிறுவனங்களை தொடர்ந்து எதிர் நோக்குகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.