வாகன துறையை கலங்கடித்த டிரம்பின் 25 சதவீத வரி விதிப்பு இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
வாகன துறையை கலங்கடித்த டிரம்பின் 25 சதவீத வரி விதிப்பு இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
ADDED : மார் 28, 2025 01:16 AM

புதுடில்லி,:வரும் ஏப்ரல் 3ம் தேதி முதல், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்கள் மற்றும் முக்கிய உதிரி பாகங்களின் மீதும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்கு எதிராக கனடா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் சேர்ந்து அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கச் செய்தால், மேலும் வரி விதிப்பேன் என்றும் அவர் எச்சரித்தார்.
ஏற்றுமதி குறைவு
டிரம்பின் இந்த முடிவால், அமெரிக்காவுக்கு அதிகளவு கார் ஏற்றுமதி செய்யும் கனடா, மெக்சிகோ, தென்கொரியா, ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். அமெரிக்காவுக்கான இந்திய நிறுவனங்களின் கார் ஏற்றுமதி மிகவும் குறைவு.
ஆனால், அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களிடமிருந்து அதிகளவு உதிரி பாகங்களை கொள்முதல் செய்கின்றன. என்ஜின், டிரான்ஸ்மிஷன், பவர்ட்ரெய்ன் அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய உதிரி பாகங்களின் ஏற்றுமதி அதிகம் என்பதால், 25 சதவீதம் வரி விதிப்பு இந்தியாவையும் பாதிக்கும் என்கிறார்கள் இத்துறையினர்.
கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 58,400 கோடி ரூபாய் மதிப்பிலான வாகன உதிரி பாகங்கள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியானது.
இறக்குமதி வரி விதிப்பின் காரணமாக, இவற்றின் விலை அதிகரிக்கும் என்பதால், இந்திய நிறுவனங்களுக்கான ஆர்டர் குறையும்.
நேற்று மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 5.47 சதவீதமும்; சம்வர்தனா மதர்சன் நிறுவனத்தின் பங்கு விலை 2.62 சதவீதமும் சரிந்தன. சோனா பி.எல்.வி., பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலையும் சரிவு கண்டன. நிப்டி வாகனத்துறை குறியீடு கிட்டத்தட்ட ஒரு சதவீதம் சரிந்தது.
அதிக பாதிப்பு இராது
இதனிடையே, டிரம்பின் இந்த அறிவிப்பால் இந்திய வாகனத்துறைக்கு பெரிய பாதிப்பு இருக்காது என ஜி.டி.ஆர்.ஐ., அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கான இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கடந்த கால ஏற்றுமதிகளை சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, இந்த வரி விதிப்பு இந்தியா வுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வரி விதிப்பால் அமெரிக்க அரசின் வருவாய் ஆண்டுக்கு 8.60 லட்சம் கோடி ரூபாய் அதிகரிக்கும் என கணிப்பு
அமெரிக்க நிறுவனங்களின் விற்பனை சரியக்கூடும் என்பதால், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 7.05 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்
25% வரி விதிப்பால், இறக்குமதி செய்யப்படும் கார்களின் விலை சராசரியாக 10.75 லட்சம் வரை அதிகரிக்கக்கூடும்
வரி விதிப்பால் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளின் வாகன தயாரிப்பு நிறுவன பங்குகள் விலை சரிந்தன
-மார்க் கார்னி, பிரதமர், கனடா