மாறும் வட்டிவிகித சூழலில் ஏற்ற முதலீடு உத்தி என்ன?
மாறும் வட்டிவிகித சூழலில் ஏற்ற முதலீடு உத்தி என்ன?
ADDED : பிப் 09, 2025 08:12 PM

வரும் மாதங்களில் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ள சூழலில் வைப்பு நிதி முதலீட்டாளர்களுக்கான அணுகுமுறை பற்றி ஒரு அலசல்.
பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் அறிவிக்கப்பட்ட ரெப்போ வட்டி விகித குறைப்பாக இது அமைகிறது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது, வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் குறையத் துவங்குவதற்கான வாய்ப்பாக கருதப்படுகிறது. அதே போலவே, வைப்பு நிதிகளுக்கான வட்டி விகித பலனும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய விகிதம்
வைப்பு நிதி முதலீட்டாளர்களை பொறுத்தவரை, தற்போதைய வட்டி விகிதத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்பாக இதை கருதலாம். அதிலும் குறிப்பாக அதிக வட்டி விகிதத்தில் முதலீடு செய்ய காத்திருந்தவர்களுக்கு, இது முதலீடு செய்வதற்கு ஏற்ற நேரமாக அமைகிறது.
வரும் மாதங்களில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்பதால், அதிக வட்டி விகிதத்தில் முதலீடு செய்வதற்கான நிலை உள்ளது. வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு, பொருத்தமான கால அளவையும் தேர்வு செய்து கொள்ளலாம். வழக்கமாக வலியுறுத்தப்படுவது போல, பல்வேறு முதிர்வு காலம் கொண்டதாக பிரித்து முதலீடு செய்யும் ஏணிப்படி உத்தியையும் பரிசீலிக்கலாம்.
அதே போல, ஏற்கனவே செய்யப்பட்ட வைப்பு நிதி முதலீடு முதிர்வடையும் நிலையில் இருந்தால், அதை மறுமுதலீடு செய்வது ஏற்றதாக இருக்குமா அல்லது மாற்றுத் திட்டம் தேவையா என பார்க்க வேண்டும். தற்போதுள்ள வைப்பு நிதிகளின் பலனை ஆய்வு செய்வது அவசியம்.
வாய்ப்பிருந்தால் முதலீட்டை விலக்கி, அதிக பலன் தரக்கூடிய வேறு வாய்ப்புகளில் முதலீடு செய்வது ஏற்றதா என்றும் பார்க்க வேண்டும். இடர் அம்சங்களை மனதில் கொண்டு வர்த்தக வைப்பு நிதி போன்றவற்றையும் பரிசீலிக்கலாம்.
நிதி இலக்குகள்
வைப்பு நிதி திட்டங்களில் அதிக வட்டி கிடைக்கும் வகையில் முதலீடு செய்வது ஏற்றது என்றாலும், ஒட்டுமொத்த நிதி திட்டமிடலிலும் கவனம் செலுத்த வேண்டும்.
வைப்பு நிதி பாதுகாப்பானது மற்றும் நிச்சயிக்கப்பட்ட பலனை அளிக்கக்கூடியது என்பதை மீறி, நீண்ட கால நோக்கில் பணவீக்கத்தின் தாக்கத்தையும் மனதில் கொள்ள வேண்டும்.
எனவே, நிதி இலக்குகளின் அடிப்படையில் வைப்பு நிதி முதலீட்டை மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும். வைப்பு நிதிக்கான பங்கை தீர்மானித்துவிட்டால், அதற்கேற்ப பொருத்தமான வட்டி விகிதம், கால அளவு சார்ந்த முதலீட்டை நாடலாம்.
வட்டி விகித போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கேற்ற முடிவுகளை மேற்கொள்வது அவசியம். இது தொடர்பான போக்குகளின் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில், வீட்டுக்கடன் போன்ற கடன்களை கொண்டுள்ளவர்களுக்கு வட்டி விகித குறைப்பு என்பது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஆசுவாசமாக அமைகிறது.
வட்டி குறைப்பின் பலனை முறையாக பயன்படுத்திக் கொள்ள, மாதத் தவணையை குறைப்பதை விட, கடனுக்கான கால அளவை குறைப்பது பொருத்தமாக இருக்கும் என வல்லுனர்கள் சொல்வதை மனதில் கொள்ள வேண்டும்.