வாழ்வியல் பண வீக்கம் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை!
வாழ்வியல் பண வீக்கம் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை!
ADDED : ஆக 17, 2025 06:54 PM

உங்கள் நிதி வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் புதிய வகை பண வீக்கம் மற்றும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் பற்றி ஒரு அறிமுகம்.
பண வீக்கத்தின் தாக்கம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். பொருட்களின் வாங்கும் சக்தி மீதான தாக்கமாக பண வீக்கம் கருதப்படுகிறது. சில்லரை பண வீக்கம் தவிர, கல்வி பண வீக்கம், மருத்துவ பண வீக்கம் போன்ற வேறு சில பண வீக்கங்களும் இருக்கின்றன.
இந்த வகையில் வாழ்வியல் பண வீக்கமும் தாக்கம் செலுத்துவதாக அமைகிறது. வாழ்வியல் பண வீக்கம் ஒருவரது நிதிநிலை மீது தாக்கம் செலுத்தும் தன்மை கொண்டிருப்பதால் இது பற்றி அறிந்திருப்பது அவசியமாகிறது. முக்கியமாக வாழ்வியல் பண வீக்கத்தை தனிநபர்கள் கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம்.
வாழ்வியல் தேவைகள்
வாழ்வியல் பண வீக்கம் கண்ணுக்கு தெரியாமல் தாக்கம் செலுத்தவல்லதாக கருதப்படுகிறது. வாழ்வியல் தேவைகள் அதிகரிப்பதற்கு ஏற்ப இந்த பணவீக்கம் வாழ்க்கைக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஒருவரது வருமானம் உயர்வதற்கு ஏற்ப அவரது வாழ்க்கைத் தேவைகள் அதிகரித்து, அதற்கேற்ப வாழ்வியல் சார்ந்த செலவுகளும் அதிகரிப்பது வாழ்வியல் பண வீக்கமாக கருதப்படுகிறது. உதாரணமாக, வருமானம் 10 சதவீதம் உயரும் போது, மாத வருமானமும் அதிகரிக்கும். வருமானம் உயர்வது நல்லது என்றாலும், இதில் கண்ணுக்கு தெரியாத தாக்கமும் இருக்கலாம்.
பொதுவாக வருமானம் அதிகரிக்கும் போது பலரும், தங்கள் வாழ்க்கை நிலை உயர்வதாக கருதி செலவுகளையும் அதிகமாக்கி கொள்கின்றனர். வருமான உயர்வால் புதிய வாகனம் வாங்கலாம். பழைய வாகனத்தை புதுப்பிக்கலாம். மேலும், பல வகையில் வாழ்க்கை செலவுகளை அதிகமாக்கலாம்.
இதனால், ஏற்படும் செலவுத் தொகை உண்மையில் ஊதிய உயர்வை விட அதிகமாக அமையலாம். அவ்வாறு நிகழும் போது, வருமானத்தை விட அதிகமாக செலவு செய்யும் நிலையும் உண்டாகலாம்.
கடன் பாதிப்பு
இதே போல, போனஸ் போன்றவை கிடைக்கும் போதும் அந்த தொகையை உற்சாகமாக செலவிடலாம் அல்லது அந்த தொகையை கணக்கிட்டு முன்னதாகவும் செலவு செய்ய விரும்பலாம்.
இவ்வாறு, வருமான உயர்வின் ஊக்கத்தால் வாழ்வியல் தேவைக்காக அதிகமாக செலவிடப்படும் தொகை வாழ்வியல் பண வீக்கமாக அமைகிறது. உதிய உயர்வின் பலனை இது இல்லாமல் செய்யக்கூடியது.
மேலும் கிரெடிட் கார்டு போன்றவை கையில் இருந்தால், வாழ்வியல் தேவைக்காக கூடுதலாக செலவிட வைக்கும். இது கடன் சுமையை அதிகமாக்கலாம். கவனிக்காமல் விட்டால் கடன் வலையை நோக்கி அழைத்துச் செல்லும்.
மேலும் வாழ்வியல் பண வீக்கம் ஒருவரது நிதி இலக்குகளையும் பாதிக்கலாம். இலக்குகளுக்கு ஏற்ப சேமிப்பையும், முதலீட்டையும் அதிகரிக்காமல் செலவுகளை அதிகரிப்பதால் இது நிகழலாம்.
மே லும் வீட்டின் பட்ஜெட்டிலும் இது தாக்கம் செலுத்தும். எனவே தான் மற்ற பண வீக்கம் போலவே வாழ்வியல் பண வீக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பது, அதற்கான நிலுவைத் தொகையில் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவது, பட்ஜெட்டில் துண்டு விழுவது போன்றவை இதற்கான அறிகுறிகள்.
இத்தகைய நிலை இருந்தால், செலவுகளை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும். அந்தஸ்திற்காக செலவு செய்வதையும் கட்டுப்படுத்த வேண்டும். எல்லாவற்றையும் விட ஊதிய உயர்வு ஏற்படும் போது, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள நினைப்பதற்கு பதில் சேமிப்பையும், முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும்.