எந்த வேலைக்கு அதிக ஆள் தேவை? உலக பொருளாதார அமைப்பு தகவல் விவசாய தொழிலாளர், ஓட்டுநருக்கு கிராக்கி
எந்த வேலைக்கு அதிக ஆள் தேவை? உலக பொருளாதார அமைப்பு தகவல் விவசாய தொழிலாளர், ஓட்டுநருக்கு கிராக்கி
ADDED : ஜன 09, 2025 01:32 AM

புதுடில்லி:விவசாய தொழிலாளர், ஓட்டுநர் வேலைகள்தான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகம் தேவைப்படும் தொழில்களாக இருக்கும் என, உலக பொருளாதார அமைப்பான டபிள்யூ.இ.எப்., தெரிவித்துள்ளது.
வேர்ல்டு எகனாமிக்ஸ் போரம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொழில்நுட்ப மேம்பாடு, புவிபொருளாதார பதற்றங்கள், மண்டல அளவிலான மாற்றங்கள், பொருளாதார அழுத்தங்கள் ஆகியவைதான் உலக அளவில் தொழிற்சாலை மற்றும் பணிகளில் ஏற்படவுள்ள மாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கவுள்ளன.
கிட்டத்தட்ட 1,000 நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து, ஏ.ஐ., தொழில்நுட்ப திறன், தகவல் தொகுப்பு, சைபர் பாதுகாப்பு ஆகியவற்றின் தேவை அதிகரிப்பது தெரிய வந்தது. வேளாண் தொழிலாளர், ஓட்டுநர், கட்டுமான பணியாளர் ஆகிய பணியிடங்கள், 2030ம் ஆண்டு வரை அதிகரிக்கும்.
காசாளர், நிர்வாக உதவியாளர், டிக்கெட் கவுன்ட்டர் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. எனினும், வரைகலை வடிவமைப்பு, ஏ.ஐ., ஆகியவற்றில் புதிய பணி வாய்ப்புகள் ஏற்படும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 17 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ள நிலையில், அவற்றில் 9.20 கோடி பணியிடங்கள் மாற்றம் காணக்கூடும், மீதமுள்ள 7.80 கோடி புதிய வேலைவாய்ப்புகளாக இருக்கும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

