ரத்தன் டாடா சொத்துக்கள் யாருக்கு? உயிலில் செல்ல நாயும் இடம்பிடித்தது
ரத்தன் டாடா சொத்துக்கள் யாருக்கு? உயிலில் செல்ல நாயும் இடம்பிடித்தது
ADDED : அக் 26, 2024 03:56 AM

மும்பை:அண்மையில் காலமான, டாடா குழும கவுரவ தலைவர் ரத்தன் டாடா, தன் மும்பை பங்களா உள்ளிட்ட, 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் குறித்து எழுதி வைத்த உயில் விபரங்கள் தெரிய வந்துள்ளன.
தன் அறக்கட்டளை, சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன், டியானா ஜிஜீபாய் ஆகியோருக்கு மட்டுமின்றி; தன் பங்களாவின் பணியாளர்களுக்கும் உயில் எழுதியுள்ளார். செல்லப் பிராணியான 'டிடோ' நாயை, தன் பிரத்யேக சமையலர் ராஜன் ஷா நன்றாக பராமரிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். அதற்கும் சேர்த்து, ராஜன் ஷாவுக்கு சொத்தில் ஒரு பகுதியை குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு, 30 ஆண்டுகளுக்கு மேலாக உணவு பரிமாறிய சுப்பையா, தன் உதவியாளர் ஷாந்தனு நாயுடு ஆகியோருக்கும் குறிப்பிட்ட தொகையை, ரத்தன் டாடா ஒதுக்கியுள்ளார்.
ரத்தன் டாடாவுக்கு, மும்பையின் கடற்கரையை ஒட்டிய 2,000 சதுர அடி அலிபாக் பங்களா, ஜூஹூ பகுதியின் தாரா சாலையில், இரண்டு அடுக்கு வீடு, கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் பிக்சட் டிபாசிட், டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83 சதவீத பங்கு என, கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய் மதிபிலான சொத்துக்கள் உள்ளன.