ADDED : மே 15, 2025 01:23 AM

புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 0.85 சதவீதமாக குறைந்துள்ளது. இது 13 மாதங்களில் இல்லாத குறைவு என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதாவது கடந்தாண்டு மார்ச் மாதத்துக்கு பின், இதுவே குறைந்தபட்சமாகும். அப்போது பணவீக்கம் 0.26 சதவீதமாக இருந்தது.
கடந்த மார்ச் மாதத்தில் 2.05 சதவீதமாகவும்; கடந்தாண்டு ஏப்ரலில் 1.19 சதவீதமாகவும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. உணவு பொருட்கள், எரிபொருள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விலை குறைந்ததே, கடந்த மாதம் பணவீக்கம் குறைய முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்த மார்ச் மாதத்தில் உணவுப் பொருட்கள் விலை 1.57 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில், கடந்த மாதம் 0.86 சதவீதம் சரிந்துள்ளது. குறிப்பாக காய்கறிகளின் விலை 18.26 சதவீதம் குறைந்துஉள்ளது.
வெங்காயத்தின் விலை மார்ச்சில் 26.65 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில், கடந்த மாதம் 0.20 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
அதே போல பழங்களின் விலை உயர்வும் 20.78 சதவீதத்திலிருந்து 8.38 சதவீதமாக குறைந்துள்ளது. பருப்பு வகைகளின் விலை 5.57 சதவீதமும்; எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் விலை 2.18 சதவீதமும் குறைந்து உள்ளது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டே பணவீக்கம் கணக்கிடப்படுவதால், வரும் மாதங்களில் பணவீக்க விகிதம் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.