ADDED : மார் 18, 2025 07:04 AM

புதுடில்லி : நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த பிப்ரவரி மாதத்தில் சற்றே அதிகரித்து, 2.38 சதவீதமாக உயர்ந்துள்ளதாக, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, கடந்த ஜனவரி மாதத்தில் 2.31 சதவீதமாகவும்; கடந்தாண்டு பிப்ரவரியில் 0.20 சதவீதமாகவும் இருந்தது.
சமையல் எண்ணெய், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை அதிகரித்ததே, கடந்த மாதம் பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
பணவீக்கம், தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் பிரிவில் 11.06 சதவீதமாகவும்; சமையல் எண்ணெய் பிரிவில் 33.59 சதவீதமாகவும்; குளிர்பானங்களில் 1.66 சதவீதமாகவும் இருந்தது.
ஜவுளி பொருட்களின் விலையும் கடந்த மாதம் சற்றே அதிகரித்தது. பழங்கள் மற்றும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தே காணப்பட்டது.
உருளைக்கிழங்கு, பால் ஆகியவற்றில் பணவீக்கம் குறைந்துள்ளது. எரிசக்தி மற்றும் மின்சார பிரிவில் தொடர்ந்து பணவாட்டமே நிலவுகிறது.