மொத்த விலை பணவீக்கம் டிசம்பரில் 2.37 சதவீதமாக உயர்வு; என்ன செய்யப்போகிறது ஆர்.பி.ஐ., ?
மொத்த விலை பணவீக்கம் டிசம்பரில் 2.37 சதவீதமாக உயர்வு; என்ன செய்யப்போகிறது ஆர்.பி.ஐ., ?
ADDED : ஜன 15, 2025 09:15 AM

புதுடில்லி; நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த டிசம்பர் மாதத்தில் 2.37 சதவீதமாக மீண்டும் அதிகரித்துள்ளது என, மத்திய அரசின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நவம்பரில் 1.89 சதவீதமாகவும்; கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் 0.86 சதவீதமாகவும் இருந்தது.
கடந்த டிசம்பரில் உணவுப் பொருட்களின் விலை சற்றே குறைந்த போதிலும்; எண்ணெய் விதைகள் போன்ற உணவு அல்லாத பிற பொருட்கள், தயாரிப்பு பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலை அதிகரித்தது, பணவீக்கம் அதிகரிக்க காரணமாக அமைந்தது. கடந்த நவம்பரில் 8.63 சதவீதமாக இருந்த உணவுப் பிரிவு பணவீக்கம், கடந்த மாதம் 8.47 சதவீதமாக சற்று குறைந்தது.
தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் கோதுமையிலும் பணவீக்கம் குறைந்தது. இந்நிலையில், உணவுப் பிரிவில் முக்கிய பங்கு வகிக்கும் காய்கறிகளில் பணவீக்கம் 28.65 சதவீதத்துடன் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக உருளை, வெங்காயம் அதிக பணவீக்கத்தை உணர்ந்தன.
இதற்கிடையே கடந்த மாதத்தின் முதல் 13 நாட்களுடன் ஒப்பிடுகையில், இம்மாதம் கச்சா எண்ணெயின் விலை 5.80 சதவீதம் அதிகரித்துள்ளதால், ஜனவரி மாதத்துக்கான மொத்த விலை பணவீக்கம் 3 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். டிசம்பர் மாதத்துக்கான சில்லரை விலை பணவீக்கம் நான்கு மாதங்களில் இல்லாத வகையில் குறைந்த நிலையில், மொத்த விலை பணவீக்கம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து அடுத்த மாதம் நடைபெறவுள்ள ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டத்தின் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மாற்றமின்றி தொடரும் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுமா அல்லது தற்போதைய நிலையே தொடருமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.