ADDED : அக் 21, 2024 12:40 AM

பண்டிகை காலத்தை முன்னிட்டு, முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்கும் தங்க இ.டி.எப்., முதலீடு பற்றி ஒரு கண்ணோட்டம்.
தங்கத்தின் விலை போக்கு உற்று கவனிக்கப்பட்டு வரும் நிலையில், சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் தங்க இ.டி.எப்., நிதிகளில் செய்யப்படும் முதலீடு அதிகரித்து வருவது, முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் இந்த வகை நிதிகளில் செய்யப்படும் முதலீடு ஏழு மடங்கு அதிகரித்திருப்பதாக 'இக்ரா அனல்டிக்ஸ்' அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு துவக்கம் முதல், தங்க இ.டி.எப்.,களில் முதலீடு 88 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
முதலீட்டாளர்கள் ஆர்வம்
தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பல வகை வழிகளில் ஒன்றாக, தங்க நிதிகள் மற்றும் இ.டி.எப்.,கள் அமைகின்றன. தங்க நிதிகள் மியூச்சுவல் பண்ட் வகையைச் சேர்ந்தவை. இவை, தங்கத்தை அடிப்படை முதலீடாக கொண்டுள்ளன. இதே போல தங்கத்தை அடிப்படையாக கொண்டதாக, அதே நேரத்தில் பங்குகள் போல, சந்தையில் பரிவர்த்தனை செய்யக்கூடியதாக தங்க இ.டி.எப்.கள் அமைகின்றன.
தங்கத்தின் விலை போக்கிற்கு ஏற்ப இவை பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. இவற்றின் பணமாக்கும் தன்மை, வெளிப்படை தன்மை மற்றும் சர்வதேச போக்குடன் இணைந்தது ஆகிய அம்சங்கள் காரணமாக, இந்த முதலீட்டை பலரும் நாடுவதாகக் கருதப்படுகிறது.
சர்வதேச நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் ஏற்ற முதலீடாக கருதப்படும் சூழலில், காகிதம் அல்லது டிஜிட்டல் வடிவில் முதலீடு செய்வது இன்னும் ஏற்றதாகக் கருதப்படுகிறது. தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் கவலை இல்லாமல், இ.டி.எப்., வடிவில் முதலீடு செய்வதை பலரும் சாதகமாக கருதுகின்றனர்.
முதலீடு பலன்
அதே நேரத்தில் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ற பலனை பெறலாம். தங்கத்தின் துாய்மை போன்ற பிரச்னையும் கிடையாது. மற்ற வகையில் தங்கத்தை வாங்கி விற்பதை விட, தங்க இ.டி.எப்.,களில் பரிவர்த்தனை செய்வது எளிதானது மற்றும் செலவு குறைந்தது.
தற்போது மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், 17 தங்க இ.டி.எப்., திட்டங்களை வழங்கி வருகின்றன.
இவை, சராசரியாக ஆண்டு அளவில் 29 சதவீத பலனையும், மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு அடிப்படையில் 17 மற்றும் 14 சதவீத அளவிலான பலனையும் அளித்துள்ளன.
பவுதீக தங்கம் அளித்துள்ள பலனுக்கு அருகாமையில் இது அமைந்துள்ளது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வு நாடாக இருப்பதால், பண்டிகை காலத்தில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் விலை போக்கு, முதலீட்டாளர்கள் மத்தியில் தாக்கம் செலுத்தும் என்றும் கருதப்படுகிறது.
இந்த பின்னணியில், குறுகிய மற்றும் நடுத்தர கால அளவிலான நோக்கில் தங்க இ.டி.எப்., களில் முதலீடு செய்யலாம் என வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர். தங்கத்தின் விலை குறையும் போது வாங்கும் உத்தியும் சரியாக இருக்கும் என்கின்றனர்.
பொதுவாக முதலீடு தொகுப்பில் 10 சதவீதம் வரை தங்கம் இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கேற்ப முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு உத்தியில் தங்க இ.டி.எப்., நிதியை சேர்த்துக் கொள்ளலாம். நிதி இலக்கு மற்றும் இடர் அம்சம் ஆகிய அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.-