வரிசேமிப்பு முதலீடுகளை ஏன் தொடர்ந்து நாட வேண்டும்?
வரிசேமிப்பு முதலீடுகளை ஏன் தொடர்ந்து நாட வேண்டும்?
ADDED : ஜன 26, 2025 07:43 PM

புதிய வரி விதிப்பு முறையின் கீழ், வரி சேமிப்பு முதலீடுகள் ஈர்ப்பு குறைந்திருந்தாலும், அவற்றை தொடர்வது அவசியம் என கருதப்படுகிறது.
வருமான வரி துறையில் முக்கிய மாற்றமாக, புதிய வரி விதிப்பு முறை கட்டாயமாக்கப்பட்டு, பழைய முறை விருப்பத்தேர்வாக இருக்கிறது. புதிய வரி விதிப்பு முறை பல்வேறு சாதக அம்சங்களை கொண்டிருந்தாலும், வரி சேமிப்பிற்காக முதலீடு செய்வதன் ஈர்ப்பை குறைத்திருக்கிறது.
வருமான வரிச்சட்டத்தின் 80சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கீழ் சலுகைகள் பெற, பி.பி.எப்., தேசிய சேமிப்பு சான்றிதழ், பி.எப்., மற்றும் தேசிய பென்ஷன் திட்டம் போன்றவை வழி செய்கின்றன. புதிய வரிவிதிப்பு முறையில், இந்த நிலை இல்லை.
பலவித பலன்கள்
புதிய வரி விதிப்பு முறையின் கீழ், வழக்கமான பல்வேறு பிடித்தங்கள், கழிவுகள் பொருந்தாத நிலையில், வரி சேமிப்பிற்கான முதலீட்டிற்கு பதிலாக, மாற்று முதலீடுகளை நாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதை சமபங்குகள், மியூச்சுவல் பண்டு உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யலாம். இது, செல்வ வளம் உருவாக்க வழி செய்யும் என கருதப்படுகிறது.
எனினும், வரிச்சலுகை ஈர்ப்பு இல்லாத நிலையிலும் கூட இந்த முதலீடு வாய்ப்புகள் தொடர்ந்து பரிசீலிக்கப்பட வேண்டும் என நிதி வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த சாதனங்கள் இடர் நிர்வாகம், ஓய்வுகால திட்டமிடல், விரிவாக்கம் ஆகியவற்றுக்கு பயன்படும்.
பொதுவாகவே, வரி சேமிப்பு சாதனங்களை வரி நோக்கில் மட்டும் அணுகாமல் அவை நிதி இலக்குகளுக்கு பொருத்தமாக அமைவது அவசியம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்த சாதனங்களின் வாயிலாக அதிக பலன் பெறும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழலிலும் இது தொடர்வதாக கருதலாம்.
விரிவாக்கம்
வரி சேமிப்பு தேவை இல்லாவிட்டாலும், இந்த முதலீடு வாய்ப்புகள் அளிக்கும் பலன்கள் முதலீடு தொகுப்பில் எவ்வாறு பொருந்துகின்றன என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். இடர்தன்மையை விரும்பாத பாரம்பரிய அணுகுமுறை கொண்ட முதலீட்டாளர்களுக்கு இது அதிகம் பொருந்தும்.
வரி சேமிப்பை மட்டும் மனதில் கொள்ளாமல், முதலீடு வாய்ப்புகளின் இயல்பு மற்றும் பலனை கொண்டு திட்டமிடும் போது, சமநிலை வாய்ந்த முதலீடு தொகுப்பை உருவாக்குவது சாத்தியமாகும்.
நிதி இலக்குகளுக்கு ஏற்ப முதலீடு வாய்ப்புகளை தேர்வு செய்வது விரிவாக்கத்தின் பலனையும் அளிக்கும். நீண்ட கால நோக்கிலும் இந்த அணுகுமுறை ஏற்றதாக அமையும்.
உதாரணத்திற்கு பி.பி.எப்., முதிர்வுக்கு பின் வரிச்சலுகை அளிக்க கூடியது. ஓய்வுகால திட்டமிடலுக்கு இது கைகொடுக்கும். இதே போலவே வருங்கால வைப்பு நிதி முதலீடும் முக்கியமானது.
மேலும் புதிய வரிவிதிப்பு முறை, முதலீட்டாளர்கள் விரும்பிய முதலீடுகளை மேற்கொள்ள வழி செய்வதாகவும் அமைகிறது.
எனவே அதிக வளர்ச்சி வாய்ப்பு கொண்ட முதலீடுகளை நாடலாம் என்றாலும், அவற்றை மட்டுமே தேர்வு செய்யாமல், இடர் அம்சங்கள் மற்றும் நிதி இலக்குகளையும் கவனத்தில் கொண்டு, தேவையான கடன்சார் முதலீடு வாய்ப்புகளையும் தேர்வு செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் வரிச்சலுகைகளுக்காக மட்டுமே பழைய வரிவிதிப்பு முறையை தேர்வு செய்வது ஏற்றதாக இருக்காது என்கின்றனர். இதற்கு கவனமான திட்டமிடல் தேவை.

