வேலையிழப்பு காப்பீடு பாலிசி பணிநீக்க காலத்தில் கைகொடுக்குமா?
வேலையிழப்பு காப்பீடு பாலிசி பணிநீக்க காலத்தில் கைகொடுக்குமா?
ADDED : ஆக 03, 2025 07:21 PM

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி நிரந்தரம் கிடையாது என்பதும், இடையே எப்போது வேண்டுமானாலும் வேலையில் இருந்து நீக்கப்படும் வாய்ப்பு இருப்பது தெரிந்த விஷயம் தான். எனினும், அண்மையில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் டி.சி.எஸ்., 12,000 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது .
மேலும், ஏ.ஐ,. எனும் செயற்கை நுண்ணறிவின் தாக்கமும் வேலையிழப்பு கவலையை அதிகமாக்கியுள்ளது. இந்த பின்னணியில், வேலையிழப்பு பாதுகாப்பு தொடர்பான காப்பீடு எந்த அளவு பொருத்தமானது என பார்க்கலாம்.
பாலிசி அம்சங்கள்:
வேலையிழப்பு பாலிசியின் கீழ் அளிக்கப்படும் பலன்கள் முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டவை. ஒரு சில பாலிசிகள் குறிப்பிட்ட மாதங்களுக்கு தொகை அளிப்பவை. சில பாலிசிகள் மொத்தமாக தொகை அளிக்கும். எனினும், வேலையில்லாமல் குறிப்பிட்ட நாட்கள் இருந்த பின்பே பலன்கள் அமலுக்கு வரும்.
நிபந்தனைகள்:
வேலையிழப்பு காப்பீடு பெற, அமைப்பு சார்ந்த துறைகளில் பணியில் இருக்க வேண்டும். உள்நாட்டு அல்லது பன்னாட்டு நிறுவனமாக இருக்கலாம். சுய தொழில் செய்வோருக்கு இது பொருந்தாது. மேலும், தானாக பதவியில் இருந்து விலகுவது அல்லது தண்டனையாக நீக்கப்படுவது போன்றவற்றுக்கும் இது பொருந்தாது.
நிதி பாதுகாப்பு:
பல்வேறு வகை காப்பீடு இருப்பது போல, எதிர்பாராத பணி நீக்கத்தால் ஏற்படும் பாதிப்பை ஈடு செய்ய வேலையிழப்பு காப்பீடு உதவுகிறது. மாற்று வேலை கிடைக்கும் வரை அத்தியாவசிய செலவு, கடன் தவணை உள்ளிட்ட பொறுப்புகளை எதிர்கொள்ள இந்த பாலிசி உதவும் நோக்கம் கொண்டது .
பிரீமியம் தொகை:
வேலையிழப்பு பாலிசிகளுக்கான பிரீமியம், பணியாளரின் ஊதியம், பாலிசி காலம், பணியாளரின் இடர் தன்மை உள்ளிட்ட அம்சங்கள் சார்ந்து அமையும். இதில் தனிநபர் மற்றும் குழு பாலிசியும் இருக்கிறது. குழு பாலிசி என்றால் பிரீமியம் தொகை குறைவாக இருக்கும்.
பலன் தருமா?
வேலையிழப்பு பாலிசி, எதிர்பாராத பணி நீக்க சூழலில் பாதுகாப்பாக அமையும். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் உண்டு. சில நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யாமல், மூன்று மாத ஊதியம் கொடுத்து தானாக விலகிச்செல்ல கோரலாம். இது போன்ற சூழலில் காப்பீடு பொருந்தாது.