சிறு நிறுவனங்களுக்கு வருமான வரியை 15 சதவகிதம் ஆக குறைக்க 'டான்ஸ்டியா' கோரிக்கை பொதுத்துறை நிறுவன கொள்முதல் உயருமா?
சிறு நிறுவனங்களுக்கு வருமான வரியை 15 சதவகிதம் ஆக குறைக்க 'டான்ஸ்டியா' கோரிக்கை பொதுத்துறை நிறுவன கொள்முதல் உயருமா?
ADDED : ஜன 08, 2025 02:09 AM

சென்னை:'பொதுத்துறை நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் அளவை, 25 சதவீதத்தில் இருந்து, 35 சதவீதமாக உயர்த்த வேண்டும்; அனைத்து வங்கிகளிலும் ஒரே மாதிரியான வட்டி நிர்ணயம் செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பட்ஜெட்டில் அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு, குறுந்தொழில்கள் சங்கம் கோரிக்கை
விடுத்துள்ளது.
மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் இடம்பெற வேண்டியவை தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, 'டான்ஸ்டியா' அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் விபரம்:
பெரு நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் என, அனைத்துக்கும் வருமான வரி ஒரே மாதிரியாக, 25 சதவீதமாக உள்ளது; இதை, வரும் பட்ஜெட்டில் சிறு நிறுவனங்களுக்கு 15 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதுடன், புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும்
வருமான வரி சலுகை கிடைக்கும் வகையில் பழைய இயந்திரங்களுக்கு பதில், புதிய இயந்திரங்களை வாங்கும் நிறுவனங்களுக்கு மொத்த தேய்மானத்தை, 100 சதவீதத்தில் இருந்து, 150 சதவீதமாக மாற்ற வேண்டும்
பொருட்களை, பொதுத்துறை நிறுவனங்கள் சிறுதொழில் நிறுவனங்களிடம் வாங்கும் கட்டாய கொள்முதல் அளவை, 25 சதவீதத்தில் இருந்து, 35 சதவீதமாக உயர்த்த வேண்டும் அனைத்து வங்கிகளிலும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு ஒரே மாதிரியாக, 8 சதவீத வட்டியில் கடன் வழங்க வேண்டும்
இயற்கை பேரிடர் பாதிப்பு தொடர்வதால் சிறுதொழில் நிறுவனங்களுக்கு தனி காப்பீடு திட்டத்தை அறிவிக்க வேண்டும்
மின் கட்டண செலவை சமாளிக்க, வீடுகளில் சூரியசக்தி மின் உற்பத்திக்கு மானியம் வழங்குவது போல், சிறு, குறு நிறுவனங்களுக்கும் மானியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.