மின்சார டாக்சிக்கு மீண்டும் ஊக்கத்தொகை கிடைக்குமா? விற்பனை சரிவால் 'டாடா' எதிர்பார்ப்பு
மின்சார டாக்சிக்கு மீண்டும் ஊக்கத்தொகை கிடைக்குமா? விற்பனை சரிவால் 'டாடா' எதிர்பார்ப்பு
ADDED : நவ 09, 2024 10:38 PM

புதுடில்லி:டாக்சி சேவைக்கு பயன்படுத்தப்படும் மின்சார காருக்கு மீண்டும் ஊக்கச் சலுகையை அரசு வழங்கும் என எதிர்பார்ப்பதாக, 'டாடா மோட்டார்ஸ்' தலைமை நிதி அதிகாரி பாலாஜி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மின்சார கார்களுக்கு 'பேம் -2' திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகையை, மத்திய அரசு கடந்த செப்டம்பரில் நிறுத்தியது.
பிரதமரின் 'இ-டிரைவ்' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்யும் முன், இந்த பிரிவில் 500 கோடி ரூபாய் வரை ஊக்கச் சலுகைகள் தரப்பட்டு வந்தன. இவை நின்று போனதும், டாக்சி சேவைக்கு பயன்படுத்தப்படும் மின்சார கார் விற்பனை சரிவடைந்துள்ளது.
மொத்த மின்சார கார் விற்பனையில், 15 சதவீதமாக இருந்த மின்சார டாக்சிகளின் விற்பனை சரிவால், கார் தயாரிப்பு, விற்பனை, டாக்சி சேவை நிறுவனங்கள் என பல தரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, டாக்சி நிறுவனங்கள், அரசின் ஊக்கத் தொகையை எதிர்நோக்கிஉள்ளன.
இவ்வாறு பாலாஜி தெரிவித்துள்ளார்.