ADDED : செப் 21, 2025 09:33 PM

முதலீடு நோக்கில் வெள்ளி ஈர்த்தாலும், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையான அணுகுமுறை கொள்வது அவசியம் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
தங்கம் போலவே அரிய உலோகமான வெள்ளியும் அண்மை ஆண்டுகளில் ஏறுமுகம் கண்டு வருகிறது. அதற்கேற்ப முதலீட்டாளர்களும் வெள்ளியில் கவனம் செலுத்துகின்றனர். வெள்ளி இ.டி.எப்., நிதிகள் பல அறிமுகம் ஆகியிருக்கின்றன.
கடந்த ஆண்டு இந்திய சந்தையில் வெள்ளி 49.3 சதவீத பலனை அளித்துள்ளது. இந்த பலன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையான அணுகுமுறை கொள்வது அவசியம் என வல்லுநர்கள் கருதுகின்றனர். வெள்ளியின் ஏறுமுகத்திற்கான அடிப்படை காரணங்களை புரிந்து கொள்வதும் அவசியம் என்கின்றனர்.
தொழில் தேவை
தொழில் துறை தொடர்பான தேவையே, சர்வதேச அளவில் வெள்ளியின் விலை ஏற்றத்திற்கான முக்கிய காரணம் என வெள்ளி கழகம் தெரிவித்துள்ளது. சோலார் பேனல்கள், மின் வாகனங்கள் போன்ற துாய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வெள்ளியின் தேவை அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.
உலக அளவில் வெள்ளியின் உற்பத்தி, கடந்த 2021ம் ஆண்டு முதல், தேவையை விட பின்தங்கியே இருக்கிறது. மேலும், புவி அரசியல் காரணமாகவும் வெள்ளி பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. வழக்கமாக தங்கத்தை கையிருப்பாக வாங்கி வைக்கும் மத்திய வங்கிகள் தற்போது வெள்ளியையும் சேர்த்து வாங்குவதாக வல்லுநர்கள் விளக்கம் தருகின்றனர்.
இந்த ஏறுமுகம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இது சர்வதேச வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளது என்கின்றனர். சர்வதேச வளர்ச்சி மந்தமானால் வெள்ளியும் சுணக்கம் காணலாம். இத்துறையில் லாபம் பார்த்தலும் நிகழலாம் என்கின்றனர்.
மேலும், தங்கத்தை விட வெள்ளி அதிக ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாகக்கூடிய அரிய உலோகம் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும், வெள்ளி வலுவான தொழில் துறை தேவை மற்றும் முதலீடு தேவையை கொண்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
முதலீடு வழி
இந்த பின்னணியில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம் என்கின்றனர். ஏற்கனவே முதலீடு செய்தவர்கள், தங்கள் முதலீடு தொகுப்பில் வெள்ளிக்கான அளவை தக்க வைத்துக்கொள்வது ஏற்ற உத்தியாக இருக்கும். இந்த ஒதுக்கீடு 5 முதல் 7 சதவீதமாக இருப்பது ஏற்றதாக இருக்கும்.
வெள்ளியில் கூடுதலாக ஒதுக்கீடு உள்ளவர்கள் பகுதி அளவு லாபம் பார் ப்பதும் பொருத்தமாக இருக்கும் என்கின்றனர். புதிய முதலீட்டாளர் களை பொறுத்தவரை, வெள்ளி உச்சத்தில் உள்ள நிலையில் மொத்தமாக முதலீடு செய்வதை தவிர்க்கலாம் என்கின்றனர்.
புதிய முதலீட்டாளர்கள் வெள்ளியில் படிப்படியாக முதலீடு செய்யும் உத்தியை பின்பற்றலாம். எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்வதன் வாயிலாக ஏற்ற இறக்கத்தை எதிர்கொள்ளலாம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் வெள்ளி இ.டி.எப்.,கள் ஏற்றதாக இருக்கும். தற்போது மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் 16 வெள்ளி நிதிகளை வழங்கி வருகின்றன. இவற்றில் இருந்து பொருத்தமான நிதியை தேர்வு செய்து கொள்ளலாம்.
வெள்ளி இ.டி.எப்.,களில் முதலீடு செய்யும் நிதிகளின் நிதிகளையும் பரிசீலிக்கலாம். நிதி இலக்குகள் மற்றும் ஒட்டுமொத்த முதலீடு தொகுப்பின் தன்மை ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். சந்தையின் போக்குகளையும் தொடர்ந்து கவனித்து, அதற்கேற்ற வகையில் முதலீடு உத்தி அமைவதை உறுதி செய்து கொள்வது நல்லது.