ராய்கட் - கரூர் மின்சார வழித்தடம் தேசிய சொத்தாக அறிவிக்கப்படுமா?
ராய்கட் - கரூர் மின்சார வழித்தடம் தேசிய சொத்தாக அறிவிக்கப்படுமா?
ADDED : நவ 21, 2024 10:33 PM

சென்னை:சத்தீஸ்கரின் ராய்கட் - தமிழகத்தின் கரூர் இடையே, 800 கிலோ வோல்ட் இரட்டை சுற்று மின்வழித்தடத்தில், வட மாநிலங்களில் இருந்து தென்மாநிலங்களுக்கு, 3,000 மெகாவாட் மின்சாரம் எடுத்து வரப்படுகிறது.
அதற்கு இணையாக, வட மாநிலங்களுக்கு மின்சாரம் செல்லாததால் தான், அந்த வழித்தடத்தை, மத்திய அரசு தேசிய சொத்தாக அறிவிக்காமல் உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின், 'பவர்கிரிட்' நிறுவனம், சத்தீஸ்கர் மாநிலம், ராய்கட்டில் இருந்து மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா இடையில், 800 கி.வோ., திறனில், 'ஹை வோல்டேஜ் டைரக்ட் கரன்ட்' எனப்படும், அதிக திறன் உடைய இரட்டை சுற்று மின் வழித்தடத்தை அமைத்துள்ளது.
மொத்தம், 1,800 கி.மீ., துாரம் உடைய அந்த வழித்தடத்திற்கு, 'ராய்கட் - புகளூர் - திருச்சூர் மின்வழித்தடம்' என, பெயரிடப்பட்டு உள்ளது.
கடந்த 2020 - 21ல் துவங்கப்பட்ட அந்த வழித்தடத்தில், தென்மாநிலங்களில் இருந்து வட மாநிலங்களுக்கும்; வட மாநிலங்களில் இருந்து தென்மாநிலங்களுக்கும் மின்சாரத்தை எடுத்துச் செல்லலாம்.
தற்போது, தமிழக மின் வாரியம் உட்பட, தென் மாநில மின்வாரியங்கள், வடமாநிலங்களில் மின் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களிடம் இருந்து தங்கள் மாநிலத்திற்கு, ராய்கட் - புகளூர் மின் வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து வருகின்றன.
இந்த வழித்தடத்தை பயன்படுத்துவதற்காக அம்மாநிலங்கள், மத்திய மின் தொடரமைப்பு நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்துகின்றன. தமிழக மின்வாரியம் மாதம், 50 கோடி ரூபாய்க்கு கட்டணம் செலுத்துகிறது.
மத்திய அரசு, அதிக திறன் உடைய மின் வழித்தடங்களை தேசிய சொத்தாக அறிவிக்கிறது. இதனால், அந்த வழித்தடத்தை பயன்படுத்தும் மாநிலங்கள் மட்டுமின்றி, பயன்படுத்தாத மாநிலங்கள் என, நாடு முழுதும் உள்ள அனைத்து மாநிலங்களும் கட்டண செலவை பகிர்ந்து கொள்கின்றன.
இதனால் பயன் பெறும் மாநிலத்திற்கு, மின்வழித்தடச் செலவு குறைகிறது.
அதன்படி, அசாம் மாநிலம், பிஸ்வநாத் சாரியாலி - உ.பி., மாநிலம், ஆக்ரா இடையே, 800 கி.வோ., வழித்தடம் தேசிய சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வட மாநிலங்களில் இரு வழித்தடங்களும் தேசிய சொத்தாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த வழித்தடங்களை தமிழக மின்வாரியம் பயன்படுத்தாத நிலையிலும் ஆண்டுக்கு 90 கோடி ரூபாய் செலுத்துகிறது.
இதனால், ராய்கட் - புகளூர் வழித்தடத்திற்கான மின்வழித்தடச் செலவு மாதம், 15 கோடி ரூபாயாக குறையும் வகையில், தேசிய சொத்தாக அறிவிக்குமாறு மின்வாரியம், மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.