தமிழகத்தின் கையை விட்டு செல்லும் காற்றாலை, சூரிய சக்தி மின்சார முதலீடுகள்
தமிழகத்தின் கையை விட்டு செல்லும் காற்றாலை, சூரிய சக்தி மின்சார முதலீடுகள்
ADDED : ஜன 16, 2025 12:08 AM

சென்னை: தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்துக்கு சாதகமான சூழல் உள்ளது. ஆனால், இத்திட்டங்களை ஊக்குவிக்கும் சலுகைகள் அடங்கிய கொள்கை அரசிடம் இல்லை.
அதேசமயம், ஆந்திராவை தொடர்ந்து தற்போது தெலுங்கானாவும் தங்களது கொள்கைகளை வெளியிட்டுள்ளதால், காற்றாலை, சூரியசக்தி மின் திட்ட முதலீடுகள் அம்மாநிலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மானியம்
தெலுங்கானா அரசு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீட்டை ஈர்க்க, ஊக்குவிப்பு சலுகைகள் அடங்கிய கொள்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, 2035க்குள் 66,694 மெகா வாட் திறனில் மின் நிலையங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, காற்றாலை, சூரியசக்தி திட்டங்களில் முதலீடு செய்வோருக்கு 25 சதவீதம் வரையும்; பேட்டரி ஸ்டோரேஜ் திட்டத்துக்கு 20 சதவீதமும் மூலதன மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவை தவிர, புதுப்பிக்கத்தக்க மின் சாதனங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் மாநில அரசின் பங்கு திரும்ப வழங்கப்படும் என்றும், 10 ஆண்டுகளுக்கு மின் வழித்தட கட்டணங்கள், மின்சார வரி, முத்திரைத்தாள் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நிலம் ஒதுக்கீட்டில் முன்னுரிமையும் அளிக்கப்பட உள்ளது.
ஆந்திர அரசும் புதுப்பிக்கத்தக்க மின் துறையில் முதலீட்டை ஈர்க்க, பல்வேறு சலுகைகள் அடங்கிய கொள்கையை 2024 இறுதியில் வெளியிட்டது.
ஆனால், இது போன்ற ஊக்குவிப்பு சலுகைகள் அடங்கிய கொள்கைகளை தமிழக அரசு வெளியிடாததால், தமிழகத்திற்கு வர வேண்டிய காற்றாலை, சூரியசக்தி திட்ட முதலீடுகள் தெலுங்கானா, ஆந்திராவுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியாளர்கள் சங்க தலைமை செயல் அதிகாரியும், முதன்மை ஆலோசகருமான கே.வெங்கடாசலம் கூறியதாவது:
தமிழகத்தில் கூடுதலாக 30,000 மெகா வாட் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையம் எவ்வளவு வேண்டுமானாலும் அமைக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்துடன் ஒப்பிடும் போது, ஆந்திரா, தெலுங்கானாவில் காற்றாலை, சூரியசக்தி மின் திட்டங்களுக்கு சாதகமான சூழல் குறைவு தான். எனினும், முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்கள், ஆந்திரா, தெலுங்கானாவில் முதலீடு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.
தமிழக அரசால் சூரிய மின்சாரத்துக்கு முதல்முறையாக 2012லும், இரண்டாவது முறையாக 2019லும் கொள்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இரண்டும் முடிவுற்ற நிலையில், புதிய கொள்கை வெளியிடப்படவில்லை.
தயக்கம்
இதனால், தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பல நிறுவனங்கள் தயாராக இருந்தாலும், அரசின் கொள்கை முடிவு தெரியாமல் இருப்பதால் முதலீடு செய்ய தயங்குகின்றன. எனவே, முதலீட்டை ஈர்க்க ஊக்குவிப்பு சலுகைகள் அடங்கிய புதிய கொள்கைகளை விரைந்து வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் தான் பசுமை மின்சாரத்துக்கு என தனி நிறுவனம் உள்ளது; அதன் வாயிலாக, புதுப்பிக்கத்தக்க மின்சார திட்டங்களை செயல்படுத்தவும், முதலீட்டை ஈர்க்கவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.
� காற்றாலை மின் நிறுவு திறனில் முதலிடத்தில் இருந்த தமிழகம் தற்போது இரண்டாவது இடத்தில்; சூரியசக்தி மின்சாரத்தில் மூன்றாவது இடம்
� திட்டங்களை ஊக்குவிக்கும் சலுகைகள் அடங்கிய கொள்கை இல்லாததால் முதலீடுகள் ஆந்திரா, தெலுங்கானாவுக்கு செல்லும் வாய்ப்பு.

