காற்றாலை இறக்கைகள் ஏற்றுமதி வ.உ.சி., துறைமுகம் 91 சதவிகிதம் வளர்ச்சி
காற்றாலை இறக்கைகள் ஏற்றுமதி வ.உ.சி., துறைமுகம் 91 சதவிகிதம் வளர்ச்சி
ADDED : ஆக 20, 2025 01:26 AM

துாத்துக்குடி:காற்றாலை இறக்கை ஏற்றுமதியில், துாத்துக்குடி துறைமுகம் அதிக வளர்ச்சியை எட்டியுள்ளது.
இதுதொடர்பாக துறைமுகம் வெளியிட்ட அறிக்கை:
சென்னை, திருச்சி, பெங்களூரு பகுதிகளில் தயாரிக்கப்படும் காற்றாலை இறக்கைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துருக்கி, ஸ்பெயின், பின்லாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு, துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டு ஜூலை மாதத்தில், எட்டு கப்பல்களில், 343 காற்றாலை இறக்கைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2024 ஜூலையில் நான்கு கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட 180 காற்றாலை இறக்கைகளை விட, தற்போது, 90.56 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
அதிகரித்து வரும் காற்றாலை இறக்கைகள் மற்றும் அதன் உதிரி பாகங்களின் ஏற்றுமதியை கருத்தில் கொண்டு, பாதுகாப்பான முறையில் சேமிப்பதற்கு வசதியாக, துறைமுகத்திற்குள், 1 லட்சம் சதுர மீட்டர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரத்யேகமான நுழைவாயிலையும் துறைமுகம் அமைத்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.