ADDED : ஆக 20, 2025 01:27 AM

புதுடில்லி:பருத்தி இறக்குமதிக்கு, வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை தற்காலிக வரி விலக்கு அளிக்கப்படுவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று முதல், வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை, பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, பருத்திக்கு 11 சதவீத இறக்குமதி வரி மற்றும் செஸ் வரி விதிக்கப்பட்டு வந்தது.
வரி விலக்கு அளிக்கும் அரசின் முடிவைத் தொடர்ந்து, ஜவுளித் தொழில்துறையினருக்கு சர்வதேச அளவில் சாதகமான விலையில் பருத்தி கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.
இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், ஜவுளித் துறையினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த முடிவு அமைந்துள்ளது.
உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதோடு, அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதியில், பிற நாடுகளோடு போட்டித் தன்மையுடன் செயல்பட இந்த அறிவிப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருத்திக்கான இறக்குமதி வரியை, செப்., 30ம் தேதி வரை ரத்து செய்வதாக, மத்திய அரசு அறிவித்துள்ளதால், தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் (டாஸ்மா) தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியுள்ளதாவது:
பருத்தி பஞ்சு இறக்குமதிக்கான வரி, 11 சதவீதத்தை தற்காலிகமாக நீக்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சீசன் நிறைவடையும் நேரத்தில் ஏற்படும் பற்றாக்குறையை, இறக்குமதி செய்து சமாளிக்கலாம். இருப்பினும், செப்., 30 வரை மட்டுமே வரிவிலக்கு வழங்கப்பட்டு உள்ளது.
அரசு அறிவித்துள்ள அவகாசம் போதுமானதாக இருக்காது. பஞ்சு கொள்முதல் செய்து எடுத்துவர கூடுதல் அவகாசம் தேவைப்படும். எனவே, அக்., 31ம் தேதி வரை, பஞ்சுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.