பெண்கள் நடத்தும் ஸ்டார்ட் அப் தமிழகத்தில் 5,000ஐ தாண்டியது
பெண்கள் நடத்தும் ஸ்டார்ட் அப் தமிழகத்தில் 5,000ஐ தாண்டியது
ADDED : பிப் 12, 2025 10:40 PM

சென்னை:தமிழகத்தில் ஸ்டார்ட் அப்களை துவக்க, பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், பெண்கள் தலைமையின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் எண்ணிக்கை, 5,000ஐ தாண்டியுள்ளது.
தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம், புத்தொழில் ஆதார நிதி திட்டத்தின் கீழ், 15 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்கிறது. இதுதவிர, முதலீடு, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை செய்கிறது. இதனால், தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்குவது அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் இருந்து, மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையில் பதிவு செய்துள்ள, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, 10,399ஆக உள்ளது.
இதில், பெண்கள் தலைமையின் கீழ் செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை, 5,156 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலுள்ள மொத்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில், 50 சதவீதத்துக்கும் அதிகமானவை சென்னையில் உள்ளன. அடுத்து, கோவை, மதுரையில் உள்ளன.