வான்வெளி தொழில் பூங்கா மத்திய அரசு அனுமதி தராததால் பணிகள் தாமதம்
வான்வெளி தொழில் பூங்கா மத்திய அரசு அனுமதி தராததால் பணிகள் தாமதம்
ADDED : ஜூன் 09, 2025 12:47 AM

சென்னை:மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால், கோவை மாவட்டம் சூலுாரில், தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனத்தின் வான்வெளி மற்றும் ராணுவ தொழில் பூங்கா அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வான்வெளி, ராணுவ துறைகளுக்கான தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம், கோவை மாவட்டம் சூலுாரில் உள்ள ராணுவ அமைச்சகத்தின் விமானப்படை தளத்தை ஒட்டி, வான்வெளி மற்றும் ராணுவ தொழில் பூங்காவை, 200 ஏக்கரில் அமைத்து வருகிறது.
இந்த பூங்காவில் உள்ள மனைகள், ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. மேலும், ராணுவ மற்றும் பயணியர் விமானங்களுக்கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும்.
எனவே, இந்த தொழில் பூங்காவில் தொழில் துவங்கும் நிறுவனங்கள், சூலுார் விமான ஓடுபாதையை பயன்படுத்தி கொள்வதற்காக, மத்திய அரசிடம், டிட்கோ கடந்த ஆண்டில் அனுமதி கோரியது. இதுவரை, அனுமதி கிடைக்கவில்லை.
இதனால், சூலுாரில் வான்வெளி மற்றும் ராணுவ தொழில் பூங்காவில் நிலம் கையகப்படுத்துவது, உள்கட்டமைப்பு பணிகள் தாமதமாகி வருகின்றன.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விமானப்படை தளத்தின் ஓடுபாதையை பயன்படுத்தி கொள்வதாக இருந்தால் தான், அங்கு வான்வெளி தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய வரும்.
இந்த அனுமதி கிடைக்காமல் நிலத்தை கையகப்படுத்தி விட்டு, நிறுவனங்கள் வரவில்லை எனில், பூங்காவின் நோக்கம் பூர்த்தி அடையாது. எனவே, மத்திய அரசிடம் அனுமதி பெறும் பணியில், தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.