மஞ்சள் பட்டாணி இறக்குமதி 2026 மார்ச் வரை வரி விலக்கு
மஞ்சள் பட்டாணி இறக்குமதி 2026 மார்ச் வரை வரி விலக்கு
ADDED : மே 31, 2025 10:44 PM

புதுடில்லி :மஞ்சள் பட்டாணி இறக்குமதிக்கு வழங்கப்பட்டிருந்த வரி விலக்கை, மத்திய அரசு, அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ளது. நேற்றோடு வரி விலக்கு முடிவடைய விருந்த நிலையில், மேலும் 10 மாதங்கள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதிகரித்து வரும் பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டில் தடையற்ற பருப்பு வினியோகத்தை உறுதி செய்வதோடு, பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க இது உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நம் நாடு தான், மஞ்சள் பட்டாணி இறக்குமதியில், உலகளவில் முதல் இடம் வகிக்கிறது. கனடா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்தே, அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
முதல்முறையாக கடந்த 2023 டிசம்பரில், மஞ்சள் பட்டாணி இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதன் பின், தற்போது வரை பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.