5,000 சதுரடி வரை தொழிற்சாலைக்கு சுயசான்றில் கட்டட அனுமதி பெறலாம்
5,000 சதுரடி வரை தொழிற்சாலைக்கு சுயசான்றில் கட்டட அனுமதி பெறலாம்
UPDATED : அக் 10, 2025 11:45 PM
ADDED : அக் 10, 2025 11:35 PM

சென்னை:தமிழகத்தில், 5,000 சதுரடி வரையிலான தொழிற்சாலைகளுக்கு, சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்குவதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை வெளியிட்டுள்ளது.
![]() |
![]() |
தற்போது, 2,500 சதுரடி வரையிலான மனையில், 3,500 சதுரடி பரப்பளவுக்கு வீடு கட்ட, சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. இத்திட்டம், 2024 ஜூலையில் துவங்கப்பட்டது. இதற்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்து உள்ளது.
அடுத்த கட்டம் தற்போது வரை இத்திட்டத்தில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர், கட்டட அனுமதி பெற்று உள்ளனர். இதனால், உள்ளாட்சி அமைப்புகளின் அலைக்கழிப்பில் சிக்காமல், எளிய முறையில் அதிகமானோர் கட்டட அனுமதி பெற்றுள்ளனர்.
இதன் அடுத்த கட்டமாக, 5,000 சதுரடி வரையிலான, சிறிய மற்றும் பசுமை வகை தொழிற்சாலை கட்டடங்களுக்கு, சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்கப் படும் என, தமிழக அரசு அறிவித்தது.
இது தொடர்பாக, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை:
தமிழகத்தில், 7,500 சதுரடி மனையில், 5,000 சதுரடி வரையிலான பசுமை மற்றும் வெள்ளை வகை தொழிற்சாலைகளுக்கான கட்டடங்கள் கட்ட, சுயசான்று முறையில் ஒப்புதல் வழங்கப்படும். இதில் கட்டடத்தின் அதிகபட்ச உயரம், 32 அடி வரை இருக்கலாம்.
இந்த கட்டடங்களில், 1,500 சதுரடிக்கு ஒன்று என்ற கணக்கில் கார் நிறுத்துமிடமும், 750 சதுரடிக்கு ஒன்று என்ற கணக்கில், மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடமும் ஒதுக்குவது கட்டாயம்.
நீர்ப்பிடிப்பு பகுதி, கடலோர பகுதிகள், மலைப் பகுதிகள் போன்ற தடை செய்யப்பட்ட இடங்கள் தவிர்த்து, பிற இடங்களில் சுயசான்று கட்டட அனுமதி பெறலாம்.
நிலத்தின் புகைப்படம், சுய சான்றிடப்பட்ட நில உரிமை ஆவணம், பட்டா, நில அளவை வரைபடம், பொறியாளர் சான்றிட்ட கட்டட வரைபடம் ஆகிய ஆவணங்களை அளிக்க வேண்டும்.
அனுமதி ரத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், 22 அடி அகல சாலை, ஊராட்சிகளில், 19 அடி அகல சாலையை ஒட்டி அமைந்துள்ள மனைகளுக்கு, இது பொருந்தும்.
இதில் வழங்கப்படும் திட்ட அனுமதி, மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும். இவ்வாறு சுயசான்று அனுமதி பெறுவதில், தவறான ஆவணங்கள் இணைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டால், அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதே போன்று, ஊராட்சி பகுதிகளில் பசுமை மற்றும் வெள்ளை வகை தொழிற்சாலைகளுக்கான கட்டடங்கள் கட்டும்போது, சாலை அகலம் தொடர்பான விதிகள் தளர்த்தப்பட்டுஉள்ளன.
பொது கட்டட விதிகளில், இதற்கான திருத்தங்கள் அடிப்படையில், ஊராட்சிகளில், தொழிற்சாலை கட்டடங்களுக்கு இதுவரை, 22 அடி அகல சாலை இருப்பது கட்டாயம் என்று இருந்தது.
இது தற்போது, 19 அடியாக குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், இந்த இரண்டு வகையில் உட்படும், 677 தொழில்களுக்கான கட்டடங்கள் கட்டுவோர் பயன் பெறுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொழிலும், அது வெளியேற்றும் மாசு அளவு அடிப்படையில், பச்சை, வெள்ளை, ஆரஞ்சு, சிவப்பு என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இதில், குறைந்த அளவு மாசு ஏற்படுத்தும் தொழில்கள், பச்சை வகையிலும், அறவே மாசு ஏற்படுத்தாத தொழில்கள், வெள்ளை வகையிலும் உள்ளன. நிலத்தின் புகைப்படம், சுய சான்றிட்ட நில உரிமை ஆவணம், பட்டா, நில அளவை வரைபடம், பொறியாளர் சான்றிட்ட கட்டட வரைபடம் ஆகிய ஆவணங்களை அளிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், 22 அடி அகல சாலை, ஊராட்சிகளில், 19 அடி அகல சாலையை ஒட்டி அமைந்துள்ள மனைகளுக்கு சுயசான்று கட்டட அனுமதி பெறலாம்