ADDED : அக் 10, 2025 11:37 PM

சென்னை:அமெரிக்காவின் 'ஸ்டேபிள்ஸ்' நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம், சென்னையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், அலுவலக பொருட்கள் விற்பனை துறையில் ஈடுபட்டு வருகிறது. சென்னை பெருங்குடியில் ஜி.சி.சி., எனப்படும் உலகளாவிய திறன் மையத்தை அமைத்துள்ளது. இதை, தமிழக தொழில்துறை அமைச்சர் ராஜா துவக்கி வைத்தார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
உலகின் பெரிய அலுவலக தீர்வு நிறுவனங்களில் ஒன்றான 'ஸ்டேபிள்ஸ்' தன் முதல் உலகளாவிய திறன் மையம் அமைப்பதற்காக தமிழகத்தை தேர்ந்தெடுத்துள்ளது. புதுமை, டிஜிட்டல் இன்ஜினியரிங், ஏ.ஐ., வாயிலாக இயக்கப்படும் தீர்வுக்கு முதன்மையான உலகளாவிய மையமாக, தமிழகத்தை வலுப்படுத்துகிறது.
ஸ்டேபிள்ஸ், 100 கோடி ரூபாய்க்கு மேல் இதில் முதலீடு செய்கிறது. 600 வேலைவாய்ப்புகளை இந்த மையம் உருவாக்கும். நாட்டில், உலகளாவிய திறன் மையங்களின் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் வளர்ச்சி கண்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.