ADDED : அக் 10, 2025 11:38 PM

சென்னை:தமிழகத்தில் வேளாண் துறையின் ஒப்புதல் குறித்த காலத்திற்குள் கிடைக்காததால், உணவு தொழில்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொழில் முனைவோர் குறை கூறுகின்றனர்.
தமிழகத்தில் உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தரமான பொருட்களை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு அதிக ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்க, 'டி.என்.எபெக்ஸ்' எனப்படும் தமிழக உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி நிறுவனம் துவக்கப்பட்டது.
அனுமதி தாமதம் இந்நிறுவனம், விவசாயிகள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்களை ஒருங்கிணைத்து, ஏற்றுமதியை அதிகரிக்கும் மதிப்பு தொடரை உருவாக்குவதுடன், தனித்துவம், பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
வேளாண் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை என, இரு துறைகளின் கீழ் டி.என்.எபெக்ஸ் செயல்படுகிறது.
இதில், வேளாண் துறையின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக இந்நிறுவன அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து, தொழில் முனைவோர் கூறியதாவது:
டி.என்.எபெக்ஸ், 2022 - 23ல் வேளாண் துறையில் இருந்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு மாற்றப்பட்டது. தொழில் வணிக ஆணையரின் கீழ் நிர்வாகம் செய்யப்பட்டாலும், புதிய திட்டங்கள், ஏற்கனவே உள்ள திட்டங்களை செயல்படுத்த, வேளாண் துறையிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
அந்த அனுமதி குறித்த காலத்தில் கிடைக்காததால், திட்டங்களை துவக்க முடியவில்லை. வேளாண் விளைபொருட்கள் மதிப்பு கூட்டப்படும் போது, சிறுதொழில் துறையின் கீழ் வருகிறது.
ஏனெனில், அந்த துறை தான், பல சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டுதல், உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்குகிறது.
மொபைல் செயலி அறுவடைக்கு பின், விளைபொருட்களை பாதுகாப்பாக வைப்பது தொடர்பான விபரங்களை விவசாயிகள், தொழில் நிறுவனங்கள் தெரிந்துகொள்ள மொபைல் செயலியை டி.என்.எபெக்ஸ் உருவாக்கியுள்ளது. இதற்கான பணி முடிந்தும் கூட இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
இதுபோல், உணவு தொழிலுக்கான ஆய்வகம் உட்பட பல திட்டங்களுக்கு கருத்துரு உருவாக்கினாலும், வேளாண் துறையின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, டி.என்.எபெக்ஸின் அனைத்து செயல்பாட்டையும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையிடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.