ADDED : மே 18, 2025 08:07 PM

ஆயிள் காப்பீடு சார்ந்த திட்டங்களில், இளம் தலைமுறையினர் டெர்ம் காப்பீடு திட்டங்களை அதிகம் நாடுகின்றனர் எனும் தகவல், ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தனியார் காப்பீடு நிறுவனம் டாடா ஏ.ஐ.ஏ., லைப் இன்சூரன்ஸ், நீல்சன் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவின் எட்டு நகரங்களில், ஜென்-இசட் எனப்படும் நவீன இளம் தலைமுறையினர் மத்தியில் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 31 சதவீதம் பேர், டெர்ம் காப்பீடு பெற திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக மாதம் 2,000 ரூபாய் செலவிட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 18 சதவீதம் பேர், ஓய்வுகால திட்டமிடலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துஉள்ளனர்.
ஆயுள் காப்பீடு திட்டத்தை தேர்வு செய்யும் போது ஆரோக்கிய பலன்களை முக்கிய அம்சமாக கருதுவதாக பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். பெண்கள் மத்தியில் இந்த எண்ணிக்கை அதிகம் உள்ளது.
டிஜிட்டல் வசதிகளை இந்த தலைமுறையினர் அதிகம் நாடினாலும், வங்கி அல்லது ஆலோசகர்கள் மூலம் காப்பீடு பாலிசிகள் பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களில், 25 சதவீதம் பேர் சமூக ஊடகங்களில் ஆலோசனை பெறுவதாகவும் தெரிவித்து உள்ளனர்.