ADDED : அக் 08, 2025 01:28 AM

புதுடில்லி:ஜோஹோ நிறுவனம், கடைகளில் பில்லிங் மற்றும் பேமென்ட் செய்ய பயன்படும் பி.ஓ.எஸ்., எனும் பாயின்ட் ஆப் சேல் சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மென்பொருள் சேவைகள் வழங்கி வரும் ஜோஹோ, இதன் வாயிலாக, ஹார்டுவேரான வன்பொருள் சந்தையிலும் கால் பதித்துள்ளது.
பேமென்ட் அக்ரிகேட்டர், அதாவது பணப்பரிமாற்ற தரகு பணியில் ஈடுபட ஜோஹோவுக்கு ரிசர்வ் வங்கி கடந்தாண்டு அங்கீகாரம் வழங்கியது.
இதைத்தொடர்ந்து, தற்போது வணிகர்கள் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் பேமென்ட் தீர்வுகள் வழங்கும் விதமாக இந்த பி.ஓ.எஸ்., சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
“வணிகர்கள் மற்றும் சிறு தொழில்களுக்கான பி.ஓ.எஸ்., சாதனங்களை வெளியிட்டுள்ளோம். பின்டெக் துறையில் நிறுவனத்தின் செயல்பாட்டை விரிவுபடுத்தி வருகிறோம்.
''ஜோஹோ டிஜிட்டல் பேமென்ட் தளத்தை உருவாக்குவதற்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படும்,” என ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தன் சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
பி.ஓ.எஸ்., சாதனங்களின் முக்கிய அம்சங்கள் பயன்பாடு: சவுண்ட் பாக்ஸ் உடன் கூடிய இந்த ஆல் இன் ஒன் சாதனம் பில் போடவும், இ.எம்.வி., கார்டுகள், யு.பி.ஐ., கியு.ஆர்., மற்றும் கான்டாக்ட்லெஸ் பேமென்ட்டுகள் ஆகியவற்றை ஏற்கவும் உதவும் இணைப்பு: இவை 4ஜி, வைபை மற்றும் புளுடூத் ஆகியவற்றுடன் ஒருங்கிணக்கப்பட்டு, பில் பிரிண்டருடன் வருகிறது இணக்கம்: அனைத்து சாதனங்களும் ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளன.