டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய சொமாட்டோ
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய சொமாட்டோ
ADDED : டிச 19, 2024 11:59 PM

மும்பை:மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பில், 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனத்தை 'சொமாட்டோ' நிறுவனம் முந்தி உள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையின் 'டாப் 30' நிறுவனங்கள் இடம்பெற்றுள்ள 'சென்செக்ஸ்' குறியீட்டில், நிறுவனங்களின் ஆறு மாதகால சராசரி சந்தை மதிப்பை கணக்கிட்டு, நிறுவனங்கள் பட்டியலில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், ஜே.எஸ்.டபிள்யு ஸ்டீல் நிறுவனத்துக்கு பதிலாக, உணவு வினியோக சொமாட்டோ நிறுவனம், இன்று முதல் இடம்பெறுகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியான போது, சொமாட்டோவின் சந்தை மதிப்பு 2.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இந்நிலையில், சொமாட்டோவின் துரித வணிக நிறுவனமான 'பிளிங்கிட்' வேகமான வளர்ச்சி கண்டு வருவதால், பல தரகு நிறுவனங்கள் இந்நிறுவனத்துக்கு சாதகமான கணிப்பை வழங்கின, இதனால் சொமாட்டோவின் சந்தை மதிப்பு விறுவிறுவென அதிகரித்தது.
கடந்த ஓராண்டில் சொமாட்டோவின் சந்தை மதிப்பு 162 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.83 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன்படி, டாடா குழுமத்தின் வாகன தயாரிப்பு அங்கமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பான 2.79 லட்சம் கோடி ரூபாயை சொமாட்டோ தாண்டியுள்ளது.