ADDED : நவ 08, 2024 11:23 PM

புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டு வரும், 'ஸ்விக்கி, சொமாட்டோ' நிறுவனங்கள், இந்திய போட்டி ஆணையத்தின் விதிமுறைகளை மீறியதாக, அதன் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
உணவு வணிகத்தில் போட்டித்தன்மையை சீர்குலைக்கும் விதத்தில் செயல்படுவதாக, இரண்டு நிறுவனங்களின் மீதும், இந்திய தேசிய உணவக சங்கம், போட்டி ஆணையத்திடம் புகார் அளித்தது. இதைத்தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு விசாரணை துவங்கியது.
ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்களுக்கு மட்டும் கடந்த மார்ச் மாதம் விசாரணை முடிவு அனுப்பப்பட்ட நிலையில், ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று அதை வெளியிட்டது. அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்கள், பிரத்யேகமாக தங்களது தளத்தில் மட்டும் பட்டியலிடும் உணவக நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கு சம்மதிக்கும் நிறுவனங்களுக்கு, சொமாட்டோ தன் கமிஷனை குறைந்துக் கொண்டுள்ளது. ஸ்விக்கி, அவற்றின் வணிக வளர்ச்சிக்கு உதவ உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்நிறுவனங்கள், விலை சமநிலையை கடைப்பிடிக்குமாறு உணவகங்களை வலியுறுத்தி, சந்தையில் போட்டித்தன்மையை குறைத்துள்ளன. இதனால், குறைந்த விலையில் உணவு வழங்கும் நிறுவனங்கள், மற்ற தளங்களிலும் வணிகம் செய்ய இயலாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.