அனைத்து என்.பி.எஸ்., சேவைகளும் இனி ஒரே இடத்தில் கிடைக்கும்
அனைத்து என்.பி.எஸ்., சேவைகளும் இனி ஒரே இடத்தில் கிடைக்கும்
UPDATED : அக் 21, 2026 12:00 AM
ADDED : அக் 20, 2026 10:26 PM

என்.பி.எஸ்., என்கிற தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்காக பி.எப்.ஆர்.டி.ஏ., இதுவரை வெவ்வேறு சி.ஆர்.ஏ., தளங்களில் தனித்தனியாக கிடைத்துவந்த என்.பி.எஸ்., சார்ந்த பல்வேறு வகையான சேவைகளை ஒருங்கிணைத்து ‘என்.பி.எஸ்., சென்ட்ரல்’ என்ற டிஜிட்டல் தளத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 1ம் தேதி அன்று என்.பி.எஸ்., தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்ட இந்த இணையதளம் ‘புரோடியன், கேபின்டெக் மற்றும் கேம்ஸ்’ ஆகிய மூன்று முன்னணி நிறுவனங்களால் இணைந்து உருவாக்கப்பட்டிருப்பதாக பி.எப்.ஆர்.டி.ஏ., அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது . இதுவரை இந்த நிறுவனங்களின் வாயிலாக நிர்வகிக்கப்படும் என்.பி.எஸ்., கணக்குகள், டயர் -– 1, டயர் –- 2 தொகைகள், மற்றும் அசட் அலோகேஷன் விபரங்களை இனி ‘www.npscentral.in’ என்ற இணையதளம் வாயிலாக ஒரே திரையில் காணலாம்.
முக்கிய விபரங்கள்
1 இந்த இணையதளத்தை பயன்படுத்தி புதிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம், ஏற்கனவே உள்ள திட்டங்களில் முதலீடுகளை தொடரலாம், கணக்கு அறிக்கைகளை பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் சுயவிபரங்களை உடனுக்குடன் புதுப்பிக்கலாம்
2 மொத்த முதலீட்டின் தற்போதைய மதிப்பு, அசல் முதலீடு மற்றும் ஒட்டுமொத்த லாபம்/வளர்ச்சி போன்றவற்றை துல்லியமாக கணக்கிடலாம்
3 ஒவ்வொரு சி.ஆர்.ஏ., தளத்திற்கும் தனித்தனியாக ‘லாக்-இன்’ செய்து சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை
4 இனி நீண்ட எண்கொண்ட நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்ணை எந்நேரமும் நினைவில் வைத்திருக்க தேவையில்லை. உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, ஓ.டி.பி., பாஸ்வேர்டு வாயிலாக எளிதாக ‘லாகின்’ செய்யலாம்
5 இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘பென்சன் ஷஹாயக்’ வசதியின் வாயிலாக புகார்களை விரைவாக பதிவு செய்து தீர்வு காணலாம்
6 பிரத்யேக முதலீட்டு தொகையுடன் ‘சூப்பர் டாப்-அப்’ சுகாதார காப்பீட்டு வசதியை இணைக்கும் என்.பி.எஸ்., ஸ்வஸ்த்யா திட்டத்திலும் இந்த இணையதளம் வாயிலாக இணைந்து கொள்ள முடியும்.
