தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/கேளுங்கள்: டேர்ம் பாலிசியில் 'ரிட்டர்ன் ஆப் பிரீமியம்' விருப்பத்தை தேர்வு செய்யலாமா?

கேளுங்கள்: டேர்ம் பாலிசியில் 'ரிட்டர்ன் ஆப் பிரீமியம்' விருப்பத்தை தேர்வு செய்யலாமா?

கேளுங்கள்: டேர்ம் பாலிசியில் 'ரிட்டர்ன் ஆப் பிரீமியம்' விருப்பத்தை தேர்வு செய்யலாமா?


UPDATED : ஜூன் 29, 2026 01:35 AM

ADDED : ஜூன் 29, 2026 01:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2026 01:35 AM ADDED : ஜூன் 29, 2026 01:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேள்வி: எனக்கு வயது 47. டேர்ம் பாலிசி தொடர்பாக எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. எண்டோவ்மென்ட் பாலிசியை புதுப்பிக்க கொடுக்கும் கால அளவுபோல, ஏன் டேர்ம் பாலிசிக்கு கொடுப்பதில்லை? அதேபோல, பிரீமியத்தில் ஒரு பகுதியை திரும்ப கொடுப்பது போன்ற டேர்ம் பாலிசியை தேர்ந்தெடுக்க வேண்டாம் என பலரும் ஆலோசனை கூறுகின்றனர். அதற்கும் விளக்கம் தாருங்கள். மேலும், நான் எந்த மாதிரியான டேர்ம் பாலிசியை தேர்ந்தெடுப்பது சிறந்ததாக இருக்கும் என்றும் சொல்லுங்கள் மேடம்.

-ஜோதி மணியன், கோவை

பதில்: பியூர் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி என்பது, பாலிசிதாரர் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் அபாயத்துக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கும் திட்டமாகும். இதில், முதலீட்டு வருமானம், மனிபேக், பிரீமியம் திருப்பி தருதல் போன்ற கூடுதல் பலன்கள் இருக்காது என்பதால், குறிப்பிட்ட காலத்திற்கான உயிர் பாதுகாப்பு செலவை மட்டுமே கருத்தில் கொண்டு, குறைந்த பிரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, ஆண்டு பிரீமியம் செலுத்தும் திட்டம் அந்த ஒரு ஆண்டுக்கான பாதுகாப்பை மட்டுமே வழங்கும்.

இது கூடுதல் அம்சங்கள் இல்லாத எளிய திட்டம் என்பதால், காப்பீட்டு பாதுகாப்பும் பிரீமியமும் நேரடியாக தொடர்புடையவை. கிரேஸ் காலத்திற்குள் பிரீமியம் செலுத்தப்படாவிட்டால், காப்பீட்டு பாதுகாப்பு நிறுத்தப்படும்; பாலிசியை மீண்டும் செயல்படுத்துவதற்கான வாய்ப்பும் இருக்காது. மனிபேக், முதலீட்டு வருமானம் போன்ற ஒவ்வொரு கூடுதல் பலனுக்கும் தனித்தனி செலவு உண்டு. அந்த கூடுதல் பிரீமியத்தின் காரணமாகத்தான் பாலிசியை மீண்டும் செயல்படுத்துதல் அல்லது சரண்டர் பலன் போன்ற சில நெகிழ்வுத்தன்மைகள் கிடைக்கின்றன.

டேர்ம் பாலிசியில் 'ரிட்டர்ன் ஆப் பிரீமியம்' விருப்பத்தை தேர்வு செய்தால், பாலிசி காலம் முழுதும் உயிருடன் இருக்கும்பட்சத்தில், செலுத்திய அனைத்து பிரீமியமும் திரும்ப கிடைக்கும். ஆனால், அதற்காக 50 முதல் 100 சதவீதம் வரை கணிசமான கூடுதல் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.

டேர்ம் பாலிசியில் இந்த விருப்பத்தை தவிர்க்கலாம் என்று யாராவது ஆலோசனை வழங்கினால், அதை நீங்கள் பின்வரும் முறையில் மதிப்பீடு செய்யலாம்:

ஒரே காப்பீட்டு தொகை மற்றும் கால அவகாசத்திற்கான டேர்ம் பாலிசியின் பிரீமியத்தை - ஒன்று 'ரிட்டர்ன் ஆப் பிரீமியம்' வசதியுடனும், மற்றொன்று அந்த வசதி இல்லாமலும் - ஒப்பிட்டு பாருங்கள். இந்த இரண்டு பிரீமியங்களுக்கு இடையிலான வித்தியாசத்தையும், பாலிசி முடிவில் திரும்ப கிடைக்கும் தொகையையும் ஒப்பிடுவதன் வாயிலாக, அந்த விருப்பம் உங்களுக்கு உண்மையில் லாபகரமானதா என்பதை அறிய முடியும்.

பியூர் டேர்ம் பாலிசியை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த கூடுதல் தொகையை தொடர் வைப்பு, பரஸ்பர நிதி எஸ்.ஐ.பி., பங்குச் சந்தை அல்லது ரியல் எஸ்டேட் போன்ற முதலீட்டு வாய்ப்புகளில் செலுத்தினால், நீண்ட காலத்தில் அதைவிட அதிக வருமானம் பெறும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கலாம். Image 1592922

கேள்வி: எனது தந்தை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பல மாதங்களாக உரிய சிகிச்சை எடுத்ததால், கடந்த மாதம் பூரணமாக குணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனது தந்தைக்கு தற்போது 64 வயதாகிறது. அவருக்கு எந்த மாதிரியான மருத்துவ காப்பீடு எடுக்கலாம். ஆலோசனை தாருங்கள்.

-விக்னேஷ், பெங்களூரு

பதில்: உங்கள் தந்தைக்கு மருத்துவ காப்பீடு கிடைப்பது சற்று சவாலாக இருக்கலாம். அதற்கு காரணம், அவருக்கு முன்பு ரத்த புற்றுநோய் இருந்ததுதான். தற்போது அவர் முழுமையாக குணமடைந்திருந்தாலும், எதிர்கால உடல்நிலை மற்றும் மருத்துவச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, காப்பீட்டு நிறுவனங்கள் இதை ஒரு பாதகமான அம்சமாகக் கருதலாம்; அவருடைய வயதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். என்றாலும் காப்பீடு கிடைப்பது இயலாதது அல்ல. ஆனால், அதிக பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கலாம் மற்றும் புற்றுநோய் போன்ற ஏற்கனவே இருந்த நோய்களுக்கு விலக்குகளும் விதிக்கப்படலாம்.

எனவே, பல நிறுவனங்களின் திட்டங்களை விசாரிப்பது நல்லது. குறிப்பாக, மூத்த குடிமக்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் காப்பீடு பெறுவதற்கான வாய்ப்பு சற்று அதிகமாக இருக்கலாம். அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு பின், கிடைக்கும் 5 லட்சம் ரூபாய் வரையிலான பாதுகாப்புடன் இணைந்து, குறைந்தபட்ச அளவிலான ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.

ஏற்கனவே இருந்த நோய்களுக்கு விலக்குகளுடன் காப்பீடு கிடைத்தாலும், அதை எடுத்துக்கொள்வது நல்லது. அதேநேரம், அவ்வாறு விலக்கப்பட்ட நோய்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்பட்டால், அதற்கான செலவுகளை சமாளிக்க, தனியாக ஒரு மருத்துவ நிதியை உருவாக்கி பராமரிப்பது பாதுகாப்பானது. கூடுதலாக, இலவசமாகவோ குறைந்த செலவிலோ சிகிச்சை கிடைக்கும் அரசு மருத்துவமனைகளையும் ஒரு மாற்று வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

க. நித்ய கல்யாணி

(கட்டுரையாளர் காப்பீடு குறித்த நிபுணத்துவ எழுத்தாளர் மற்றும் பெருநிறுவன வரலாற்றாசிரியர்.)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us