தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/கேளுங்கள்: வீட்டுக்கடன்: இருவருக்கும் ஆயுள் காப்பீடு தேவையா?

கேளுங்கள்: வீட்டுக்கடன்: இருவருக்கும் ஆயுள் காப்பீடு தேவையா?

கேளுங்கள்: வீட்டுக்கடன்: இருவருக்கும் ஆயுள் காப்பீடு தேவையா?


UPDATED : அக் 26, 2026 02:25 AM

ADDED : அக் 25, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 02:25 AM ADDED : அக் 25, 2026 09:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கணவன் மற்றும் மனைவி இருவரின் கூட்டுப் பெயரில் வீடு வாங்கப்பட்டுள்ளது. வீட்டுக்கடனும் இருவரின் கூட்டுப் பெயரிலும் 'கூட்டு மற்றும் தனித்தனியான பொறுப்பு என்ற அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளது. கூட்டுக்கடன் வாங்கியவர்களில் யாருக்காவது ஏதேனும் நேரிட்டால், அந்தக் கடனை ஈடுசெய்வதற்கு காப்பீடு எடுக்குமாறு வங்கி பரிந்துரைக்கிறது. கூட்டுக்கடன் வாங்கியவர்களில் யாருக்கேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், கடன்பொறுப்பிலிருந்து விலக்கு பெற முடியுமா? இதற்கு எந்த காப்பீட்டுத் திட்டம் பொருத்தமானதாக இருக்கும்?

- எஸ்.கந்தசாமி,

மின்னஞ்சல்

சொந்த வீடு வாங்கியிருப்பதற்கு முதலில் வாழ்த்துகள். வீட்டு கடன் வாங்குபவர்கள் ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்வது பொதுவான நடைமுறை. இதன் முதன்மையான நோக்கம், கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் வங்கிக்கு சேர வேண்டிய பணத்தை பாதுகாப்பதுதான். அதே நேரத்தில், கடன் வாங்கியவரின் குடும்பத்துக்கும் இது முக்கியமான பாதுகாப்பாக அமைகிறது.

உதாரணமாக, வீட்டு கடனில் இன்னும் 30 லட்சம் ரூபாய் பாக்கி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். கடன் வாங்கியவர் இறந்துவிட்டால், அவருடைய ஆயுள் காப்பீட்டின் கிளெய்ம் தொகையிலிருந்து அந்த கடனை அடைக்கலாம். பாலிசி வங்கிக்கு உரிமை ஒப்படைப்பு செய்யப்பட்டிருந்தால், அதன் விதிமுறைகளின்படி வங்கிக்கு சேர வேண்டிய தொகை வழங்கப்படும். மீதமுள்ள தொகை இருந்தால், அதை பெறுவதற்கான உரிமை யாருக்கு இருக்கிறதோ அவருக்கு வழங்கப்படும்.

உங்கள் கேள்விக்கான பதில், ஆம். நீங்கள் விரும்பும் பாதுகாப்பை பெற முடியும்.

உங்கள் இருவரின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கும் ஜாயின்ட் லைப் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை பரிசீலிக்கலாம். ஆனால், இருவரில் யார் முதலில் இறந்தாலும் முழு காப்பீட்டு தொகையும் வழங்கப்படும் வகையிலான பாலிசியாக அது இருக்க வேண்டும்.

மற்றொரு வழி, உங்கள் இருவருக்கும் தனித்தனியாக டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எடுப்பது. இதில் ஒருவருடைய இறப்புக்கான கிளெய்ம் தொகையே மீதமுள்ள வீட்டு கடனை அடைக்க போதுமானதாக இருக்க வேண்டும்.

எந்த வழியை தேர்ந்தெடுத்தாலும், காப்பீட்டு தொகை கடன் தொகைக்கு குறையாமலும், பாலிசியின் காலம் கடனை திருப்பி செலுத்த வேண்டிய காலத்துக்கு குறையாமலும் இருப்பது நல்லது.

உங்கள் வங்கியிடம் பொருத்தமான பாலிசிகள் பற்றி கேளுங்கள். அதே நேரத்தில் மற்ற நிறுவனங்களின் பாலிசிகளையும் ஒப்பிட்டு பாருங்கள். வங்கி பரிந்துரைக்கும் குறிப்பிட்ட பாலிசியைத்தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

முக்கியமாக, இருவரில் யார் இறந்தாலும் கடன் முழுவதும் அடைக்கப்படுமா என்பதை பாலிசி விதிமுறைகளில் உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.

எனக்கு 67 வயது. என் மனைவிக்கு 64 வயது. நான் கடந்த 3 ஆண்டுகளாக 5 லட்சம் ரூபாய்க்கு ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் 'ஆரோக்கிய சஞ்சீவினி திட்டத்தை' எடுத்திருக்கிறேன். என் மாத மொத்த வருமானம் 35,000 ரூபாய். எனக்கு ரத்த அழுத்தம் மற்றும் என் மனைவிக்கு ஆரம்ப நிலை சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளது. மேலே நான் குறிப்பிட்டிருக்கும் திட்டம் எங்களுக்கு போதுமானதா, அல்லது வேறு திட்டம் மாற்றவேண்டுமா?

- ராமசாமி,

பெங்களூரு

உங்கள் இருவருக்கும் தொடர்ந்து மருத்துவ கவனம் தேவைப்படும் உடல்நல பிரச்சினைகள் இருக்கின்றன. இவை கட்டுப்பாட்டில் இருந்தாலும், எதிர்காலத்தில் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவதற்கான வாய்ப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். பெங்களூரில் நீங்கள் சிகிச்சை பெறக்கூடிய மருத்துவமனைகளில் பொதுவான சிகிச்சைகளுக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுடைய 5 லட்சம் ரூபாய் காப்பீடு பேமிலி ப்ளோட்டர் வகையை சேர்ந்ததா என்பதும் முக்கியம். அப்படியானால் இருவருக்கும் சேர்த்துத்தான் அந்த மொத்த கவரேஜ். இருவருக்கும் தனித்தனியாக 5 லட்சம் ரூபாய் கவரேஜ் கொண்ட பாலிசியாக இருந்தால் பாதுகாப்பு அதிகம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் கிளெய்ம் செய்யாததற்காக நோ கிளெய்ம் போனஸ் சேர்ந்திருக்கிறதா என்பதையும் பாருங்கள். உங்கள் பாலிசியில் காப்பீட்டு தொகை தீர்ந்துவிட்டால் அதை மீண்டும் நிரப்பும் வசதி இருக்கிறதா என்பதையும் சரிபாருங்கள்.

மேலும், ஆரோக்கிய சஞ்சீவினி பாலிசியில் உள்ள 'கோ-பே', செலவு வரம்புகள் போன்ற நிபந்தனைகளையும் கவனிக்க வேண்டும். இவை பற்றி இந்த பகுதியில் முன்பும் பலமுறை விளக்கியிருக்கிறேன்.

முதலில் உங்கள் தற்போதைய இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமே காப்பீட்டு தொகையை உயர்த்த முடியுமா என்று கேளுங்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக கிளெய்ம் செய்யவில்லை என்றால் அதையும், தற்போதைய உடல்நிலை கட்டுப்பாட்டில் இருப்பதையும் எடுத்து சொல்லுங்கள். ஆனால், கூடுதல் காப்பீட்டு தொகை வழங்குவது நிறுவனத்தின் மதிப்பீட்டை பொறுத்தது.

மற்றொரு வழி, 'சூப்பர் டாப்-அப்' பாலிசி. உதாரணமாக, 5 லட்சம் ரூபாய் டிடக்டிபிள் கொண்ட பாலிசி எடுத்தால், ஓராண்டில் தகுதியான மருத்துவ செலவுகள் அந்த தொகையை தாண்டும்போது கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். இதற்கான பிரீமியம், அதே அளவுக்கு அடிப்படை காப்பீட்டை அதிகரிப்பதைவிட குறைவாக இருக்கும்.

ஆனால், புதிய பாலிசியின் காத்திருப்பு காலம், ஏற்கெனவே உள்ள நோய்களுக்கான நிபந்தனைகள், கோ-பே ஆகியவற்றை தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்னொரு முக்கியமான வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்கு 70 வயது நிறைவடைந்ததும், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 'ஆயுஷ்மான் வய வந்தனா' அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். வருமான வரம்பின்றி, 70 வயதும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை குடும்ப அடிப்படையில் மருத்துவமனை சிகிச்சை பாதுகாப்பு வழங்கும் திட்டம் இது.

இவ்வளவு கவனமாக முன்கூட்டியே யோசிப்பதே நல்ல தொடக்கம். உங்கள் வருமானத்துக்கும் தேவைகளுக்கும் பொருத்தமான முடிவெடுத்தால், தேவையற்ற கவலையின்றி இருக்கலாம்.

Image 1636088

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us