UPDATED : அக் 17, 2026 12:00 AM
ADDED : அக் 16, 2026 10:46 PM

சென்னையை தலைமையிடமாக கொண்ட ‘போன்பிக்லியோலி டிரான்ஸ்மிஷன்ஸ்’ நிறுவனம், கியர்பாக்ஸ், கியர் மோட்டார், டிரைவ் சிஸ்டம்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. பல்வேறு தொழில்துறை இயந்திரங்கள் இயங்குவதற்கு இவை முக்கிய கூறுகளாக உள்ளன. இந்நிறுவனம் இத்தாலியை சேர்ந்த போன்பிக்லியோலி குழுமத்தின் ஓர் அங்கமாகும். தமிழ்நாட்டில் திருமுடிவாக்கம் மற்றும் மன்னூர், மஹாராஷ்டிராவின் தலேகான் போன்ற இடங்களில் ஆலைகளை கொண்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் 13 விற்பனை அலுவலகங்களையும், 44 வினியோகஸ்தர்களையும் கொண்டுள்ளது. பல்வேறு இயந்திர உற்பத்தி நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக உள்ளன. சில வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக தயாரிப்புகளையும் வடிவமைக்கிறது.
நிறுவனத்தின் பிரிவுகள்:
1. தொழில்துறை மற்றும் தானியங்கி அமைப்புகள்: பொருட்களை கையாளுதல், ரசாயனம், உணவு பதப்படுத்துதல், இயந்திர கருவிகள் உள்ளிட்ட துறைகளுக்கான இயக்க அமைப்புகளை வழங்குகிறது.
2. கனரக வாகனங்கள் மற்றும் இயந்திர இயக்க அமைப்புகள்: அகழாய்வு இயந்திரங்கள், கான்கிரீட் தயாரிப்பு மற்றும் கட்டுமான உபகரணங்கள், சாலை அமைக்கும் இயந்திரங்கள், விவசாய இயந்திரங்கள் மற்றும் சுரங்க பணி இயந்திரங்களுக்கான இயக்க அமைப்புகளை உற்பத்தி செய்கிறது.
3. காற்றாலை மின்சாரம்: காற்றாலையின் சுழலும் பகுதியை திசைதிருப்பவும், இறக்கைகளின் கோணத்தை மாற்றவும் உதவும் இயக்க அமைப்புகளை தயாரிக்கிறது.
சிறப்பம்சங்கள்
• கியர்பாக்ஸ் மற்றும் டிரைவ்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனம்
• தொழில்நுட்ப அடிப்படையிலான முழுமையான ‘பவர் டிரான்ஸ்மிஷன்’ தீர்வுகளை வழங்குகிறது
• பெரிய வாடிக்கையாளர்கள் மற்றும் முன்னணி உற்பத்தி நிறுவனங்களுடன் நீண்டகால உறவு
• வணிக செயல்திறன் மற்றும் கடன் சுமை குறைந்த நிதி நிலை
• உள்ளூர் மூலப்பொருள் கொள்முதலை அதிகரித்து செலவை குறைக்கும் முயற்சி
• சென்னை ஆராய்ச்சி மையம் இந்தியாவிலேயே காற்றாலைகளுக்கான ‘யாவ் மற்றும் பிட்ச்’ டிரைவ்களை சோதிக்கும் ஒரே மையமாக உள்ளது.
இடர்கள்
• முழுக்க ஓ.எப்.எஸ்., வெளியீடு என்பதால், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு புதிய நிதி கிடைக்காது
• தொழில்நுட்பம், அறிவுசார் சொத்துரிமை, வர்த்தக முத்திரை மற்றும் ஆராய்ச்சி வசதிகளுக்கு தாய் நிறுவனத்தை சார்ந்திருப்பது
• குறைந்த எண்ணிக்கையிலான பெரிய வாடிக்கையாளர்களை அதிகம் சார்ந்திருப்பது
• உற்பத்தி ஆலைகள் சில இடங்களில் மட்டும் அமைந்திருப்பது
• சில முக்கிய தயாரிப்புகளை அதிகம் சார்ந்திருப்பது
• மூலப்பொருள் மற்றும் பாகங்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்.
கவனம்: முதலீடு செய்யும் முன் விலை மதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ளவேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்கவேண்டும்
