போரக்ஸ்: அமெரிக்க பணவீக்க முடிவுகளை பொறுத்து ரூபாய் வலுப்பெறலாம்
போரக்ஸ்: அமெரிக்க பணவீக்க முடிவுகளை பொறுத்து ரூபாய் வலுப்பெறலாம்
ADDED : செப் 10, 2025 01:25 AM

இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த வாரத்தை விட, இந்த வாரம் சற்று மேம்பட்டது. கடந்த வாரம் ரூபாய் அதன் அதிகபட்ச உயர்வைக் கண்டது. ஆனால், இந்த வாரம், 88.00 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. இது சந்தையில் ஒரு அமைதியான சூழலை ஏற்படுத்தியுள்ளது. உலக நிகழ்வுகள் மற்றும் கொள்கை முடிவுகள், ரூபாயின் அடுத்த நகர்வை எப்படி தீர்மானிக்கும் என்பதை அனைவரும் உற்று நோக்கி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே சிறந்த உறவு இருப்பதாகவும், இருதரப்பு உறவுகளைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை என்று கூறியது, ரூபாயின் அழுத்தத்தைக் குறைத்தது. இது முதலீட்டாளர்களுக்கு ஒருவித நிம்மதியை அளித்து, ரூபாயின் சரிவுக்குப் பிறகு நிதானமாக வர்த்தகம் செய்ய உதவியது.
டாலரின் மதிப்பு
ரூபாயின் மதிப்பு உயர்வுக்கு மற்றொரு காரணம், அமெரிக்க டாலரின் பலவீனம். வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அமெரிக்காவின் வேலை வாய்ப்பு குறித்த அறிக்கை, ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க பொருளாதாரம் 22,000 வேலைகளை மட்டுமே உருவாக்கியுள்ளதாகக் காட்டியது.
இது எதிர்பார்த்த 75,000-ஐ விட மிகவும் குறைவு. ஜனவரி 2021-க்குப் பிறகு இது மிக மெதுவான வேலை வளர்ச்சி விகிதமாகும். அதேநேரம், வேலையின்மை விகிதம் 4.3% ஆக உயர்ந்தது.
இந்த பலவீனமான வேலைவாய்ப்பு தரவு, வட்டி விகித குறைப்புகளுக்கு வழிவகுக்கும் என்று வர்த்தகர்கள் நம்பினர். 'பெட்வாட்ச்' கணிப்பு இந்த ஆண்டு பெடரல் ரிசர்வ், வட்டி விகிதங்களை 75 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கும் வாய்ப்பு 40 சதவீதத்திலிருந்து கிட்டத்தட்ட 75 சதவீதமாக உயர்ந்தது. வட்டி விகிதங்கள் குறைந்தால், டாலரின் மதிப்பு குறையும்; இதனால் இந்திய ரூபாய் போன்ற வளரும் நாடுகளின் நாணயங்கள் வலுப்பெற வாய்ப்புள்ளது.
எதிர்பார்ப்புகள்
வரும் நாட்களில் அமெரிக்காவின் ஆகஸ்ட் மாத சில்லரை விலை பணவீக்க தரவு வெளியிடப்படும். இது முக்கியமானது.
பணவீக்கம் குறைந்தால், வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படும், இதனால் டாலர் பலவீனமடையும். ஆனால், பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தால், அது பெடரல் ரிசர்வின் கொள்கை முடிவுகளை சிக்கலாக்கி, டாலரின் மதிப்பில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தும்.
எதிர்கால பார்வை
அடுத்த சில நாட்களில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 87.50--88.50 என்ற வரம்பில் வர்த்தகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் பலவீனமான தரவுகள் மற்றும் வட்டி விகித குறைப்புகள் ரூபாய்க்கு ஆதரவளித்தாலும், இந்தியாவின் வர்த்தகம் மற்றும் அமெரிக்க வரி தடைகள் ரூபா யின் மீட்சியை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.