மூலதன ஆதாய கணக்கு திட்டம் வரி விலக்கு பெற ஒரு வாய்ப்பு
மூலதன ஆதாய கணக்கு திட்டம் வரி விலக்கு பெற ஒரு வாய்ப்பு
ADDED : ஜன 03, 2026 02:08 AM

வீடு அல்லது சொத்துக் க ளை விற்ற பணத்தை, சற்று நிதானமாக யோசித்து முதலீடு செய்ய நினைக்கிறீர்களா? அதேநேரம், அதற்கு வரிவிலக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறதா? இப்படி யோசிப்பவர்களுக்கு தான், 'மூலதன ஆதாய கணக்கு திட்டம் - 1988' உள்ளது.
சொத்து விற்பனை வாயிலாகக் கிடைக்கும் லாபத்தை, குறிப்பிட்ட காலத்துக்குள் மற்றொரு சொத்தில் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு முதலீடு செய்ய தவறுவோர் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், அந்த நிதியாண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய தேதிக்குள் புதிய சொத்து வாங்க முடியவில்லை என்றால், அந்த பணத்தை வங்கிகளில் உள்ள 'மூலதன ஆதாய கணக்கில்' டிபாசிட் செய்து வரிவிலக்கு கோர முடியும்.
ஆனால், வங்கிகள் கூறும் குறிப்பிட்ட காலத்துக்குள், மீண்டும் அந்தத் தொகையை கொண்டு, வீடு அல்லது சொத்துகளை மட்டுமே வாங்க வேண்டும். அப்போதுதான் வரிவிலக்கு கிடைக்கும். அதேநேரம், மூலதன ஆதாய கணக்கில் செய்யப்படும் டிபாசிட்டுக்கு வங்கிகள் வட்டியும் கொடுக்கின்றன.
'கேப்பிடல் கெயின்ஸ் அக்கவுன்ட்' எனும் மூலதன ஆதாய கணக்கு, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் ஏற்கனவே உள்ள நிலையில், 19 முன்னணி தனியார் வங்கிகளும் இந்த சேவையை வழங்க, மத்திய நிதியமைச்சகம் கடந்த 2025 நவம்பரில் அனுமதி வழங்கியது.
எனவே, கடந்த 2025ம் ஆண்டு சொத்து விற்று லாபம் ஈட்டியவர்கள், 2025 - 26ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னதாக, தங்களுக்கு ஏற்கனவே கணக்கு உள்ள வங்கிகளில் டிபாசிட் செய்து வரிவிலக்கு பெறமுடியும்.
சொத்து விற்றதற்கான பத்திர பதிவு ஆவணம், மூலதன ஆதாய கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பம், வாரிசுதாரர் விபரங்களை வங்கியில் சமர்ப்பித்து கணக்கை துவங்கலாம்.

