
தங்கம்
நீண்டகால உயர்வுக்கு ஆதரவு
த ங்கத்தின் விலை அண்மைக் காலமாக வலுவாக நிலைத்து வருகிறது. மத்திய வங்கிகள், சராசரியை விட இரட்டிப்பு அளவில் தங்கம் வாங்கிக் கொண்டிருப்பது, விலைக்கு அடித்தளமாக செயல்படுகிறது.
அதே நேரம், உலகளாவிய அரசியல்- பொருளாதார மாற்றங்கள், பணவீக்கம், மற்றும் அமெரிக்க டாலர் பலம் குறையும் சாத்தியங்கள் ஆகியவை தங்கத்தின் நீண்டகால உயர்ச்சி நிலைக்கு ஆதரவளிக்கின்றன.
ஆனால், மத்திய வங்கிகளின் கொள்முதல் திடீரென மந்தமடையவோ அல்லது அமெரிக்கா வட்டி விகிதங்களை நீண்டகாலம் உயர்ந்த மட்டத்தில் வைத்திருக்கவோ செய்தால், தங்கத்தின் விலையில் அழுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்தியா உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோர் நாடுகளில் ஒன்றாகும். திருமணம், விழாக்கள், நகை உற்பத்தி போன்ற காரணங்களால் தங்கத்திற்கான தேவை எப்போதும் அதிகமாகவே இருக்கும். இதனால், இந்தியா ஆண்டுதோறும் பெருமளவில் தங்கத்தை இறக்குமதி செய்கிறது.
கச்சா எண்ணெய்
விலையை நிர்ணயிக்கும் செய்திகள்
ச ர்வதேச சந்தையில் டபுள்.யு.டி.ஐ., கச்சா எண்ணெய் விலை, கடந்த சில வாரங்களாகவே ஒரு பேரல் 61 - 66 அமெரிக்க டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வந்தது. இதற்கு சந்தையில் நிலவும் சாதகம் மற்றும் பாதகமான செய்திகள் காரணமாகும்.
அமெரிக்க பெட்ரோலிய நிறுவனம் செப்டம்பர் 12ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பில் 34.2 லட்சம் பீப்பாய் குறைவு ஏற்பட்டதாக அறிவித்தது. இது எதிர்பார்க்கப்பட்ட 16 லட்சம் பீப்பாய் குறைவைக் காட்டிலும் அதிகமாக இருந்ததால், சந்தையில் விலை ஏற்றம் காணப்பட்டது.