
தங்கம்
மேலும் உயரக்கூடும்
ச ர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து, வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பணவீக்க விகிதம் மற்றும் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகமானதின் காரணமாக, இந்த ஆண்டில் முதல் முறையாக, 0.25 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வட்டி விகிதத்தை, அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் வங்கி குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு, சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவுக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் அதிகரித்ததால், விலை உயர்வு காணப்பட்டது.
அமெரிக்க மத்திய வங்கி, கடந்த ஜூலை மாத கூட்டத்தில், வட்டி விகிதத்தை 4.25 சதவீதம் முதல் 4.50 சதவீதம் வரை மாறாமல் வைத்தது. கடைசியாக, அடிப்படை வட்டி விகிதத்தை 2024 டிசம்பரில் மாற்றியது.
தற்போது ஒரு அவுன்ஸ் (31.10 கிராம்) கிட்டத்தட்ட 3,700 டாலருக்கு வர்த்தகம் ஆகிறது. வரும் காலங்களில் விலை அதிகரித்து 4,000 டாலர் என்ற நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய்
உற்பத்தி பாதிக்கப்படலாம்
க ச்சா எண்ணெய் விலை, கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, சிறிது ஏற்றத்துடன், ஒரு பேரல் கிட்டத்தட்ட 64 டாலர் என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாடு அண்மையில், ட்ரோன்கள் வாயிலாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் துறைமுகங்கள் மீது தாக்குதலை நடத்தியது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ரஷ்யா, கச்சா எண்ணெய் உற்பத்தியில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக உள்ளது. தினசரி உற்பத்தி 107.50 லட்சம் முதல் 109 லட்சம் பேரல்கள் ஆகும். சீனாவின் தேவையும் 5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.