
தங்கம்
ச ர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே தினம் ஒரு உச்சத்தை எட்டி வர்த்தகமாகி வருகிறது. நேற்று ஒரு அவுன்ஸ் (31.10 கிராம்) 4,200 அமெரிக்க டாலரைக் கடந்து, புதியதொரு உச்ச விலையை எட்டியது. குறிப்பாக, கடந்த மூன்று மாதங்களில் ஒரு அவுன்சுக்கு ஆயிரம் டாலர் விலை உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள வட்டி விகித கொள்கை கூட்டத்தில், பெடரல் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
இதனால் அமெரிக்கா நாணயத்தின் மதிப்பு சரிவு, மற்றும் இம்மாதம் தொடக்கம் முதல் அமெரிக்க அரசாங்கம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சூழலால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் ஆகியவை காரணமாக, முதலீட்டாளர்களின் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது. மேலும், கடந்த சில மாதங்களாக, உலகில் உள்ள மத்திய வங்கிகள், தங்களது தங்க கொள்முதலை அதிகரித்ததும், இவ்விலை உயர்வுக்கு ஒரு காரணமாக அமைந்தது.
கே.முருகேஷ் குமார்
துணை தலைவர், சாய்ஸ் புரோக்கிங் பிரைவேட் லிமிடெட்
வெள்ளி
ச ர்வதேச சந்தையில், வெள்ளி விலை, இந்த வாரம் வரலாற்று உச்சமாக, ஒரு அவுன்ஸ் 53.60 அமெரிக்க டாலரை எட்டியது. கடந்த ஜூன் மாதத்தில், ஒரு அவுன்ஸ் 33 டாலர் என்ற நிலையில் இருந்து தொடர்ந்து உயர்ந்து தற்போது வரலாற்று உச்சத்தை எட்டி, வர்த்தகமாகி வருகிறது.
தங்கத்தின் விலையுடன் இணைந்து, வெள்ளியும் உயர்வான போக்கை பிரதிபலிக்கிறது. வினியோக குறைவால் வெள்ளி புதிய உச்சங்களை எட்டியது. சுரங்க உற்பத்தி குறைந்துள்ள நிலையில், வினியோகம், தேவை இவை இரண்டுக்கும் இடையேயான சமநிலை மேலும் இறுக்கமாகியுள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்க எத்தனை அவுன்ஸ் வெள்ளி தேவைப்படும் என்பதை காட்டும் 'தங்க-வெள்ளி விகிதம்' பொதுவாக 50 மற்றும் 60க்கு இடையே மாறுபடும். இப்போது, அந்த எண் 77 ஆக உள்ளது. இதன் பொருள், தங்கத்தை வாங்க, தற்போது மிகவும் அதிகமான வெள்ளி தேவைப்படுகிறது.
இந்த விகிதம் 77-லிருந்து மீண்டும் சராசரியான 60-க்கு குறையும்போது, முதலீட்டாளர்கள் தங்கம் -வெள்ளி விலைகள் சமநிலைக்குத் திரும்பக்கூடும் என்று எதிர்பார்ப்பார்கள்.