
தங்கம்
அதிபர்கள் சந்திப்பால்
அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
ச ர்வதேச சந்தையில் 31.10 கிராம் எடையுள்ள ஒரு அவுன்ஸ் தங்கம் ஆக., மாதம் முதல் 9 வாரங்களில் 1,070 அமெரிக்க டாலர்கள் அதிகரித்து, கடந்த வாரம் முன்னெப்போதும் இல்லாத அளவாக 4,381 டாலர்களானது.
இந்நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தது, அமெரிக்கா - சீனா இடையே நடந்து வந்த வர்த்தக மோதல் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்ற அமெரிக்க அதிபரின் அறிவிப்பு ஆகியவை, சந்தையில் தங்கம் விலை சரிய காரணமாக அமைந்தது. மேலும், வரும் வியாழக்கிழமை அன்று, தென்கொரியாவில் இருநாட்டு அதிபர்களும் சந்திக்க இருப்பதும் முதலீட்டாளர் களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்குதலில் இழுபறி நீடிப்பதால், இம்மாத தொடக்கத்தில் இருந்து, அந்நாட்டு அரசாங்க அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் அரசு பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பது, பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
அதேநேரம், அமெரிக்க பெடரல் வங்கியின் பணக்கொள்கை கூட்டத்தில், வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் தங்கம் விலைக்கு ஆதரவாக உள்ளது.
இந்த சூழலில், தங்கம் விலை, வரலாற்று உச்ச விலையிலிருந்து 8.5 சதவீதம் சரிந்து, தற்போது ஒரு அவுன்ஸ் கிட்டத்தட்ட 4,056 டாலரில் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்து வருவதால், உள்நாட்டிலும் ஆபரணத் தங்கம் விலை குறைந்துள்ளது.

