'டிமேட் 'கணக்கில் வருகிறது மாற்றம் போர்ட்போலியோவை கணக்கிடுவதில் புதிய முறை
'டிமேட் 'கணக்கில் வருகிறது மாற்றம் போர்ட்போலியோவை கணக்கிடுவதில் புதிய முறை
ADDED : நவ 27, 2025 12:35 AM

அடிப்படை சேவைகளை மட்டுமே தரும் 'டிமேட்' கணக்கை, மேலும் எளிமையாக்கும் முயற்சியில் 'செபி' இறங்கியுள்ளது. வங்கி சேமிப்பு கணக்குகளில் எப்படி அடிப்படை கணக்கு இருக்கிறதோ, அதேபோல் 'டிமேட்' கணக்கிலும் அடிப்படை சேவைகளை மட்டுமே வழங்கும் கணக்கு இருக்கிறது. இதில் தான் தற்போது சில மாறுதல்களை கொண்டுவர செபி ஆலோசித்துள்ளது.
'டிமேட்' கணக்கின் சுருக்கமான வடிவம் தான் 'அடிப்படை டிமேட்' என்பது. இந்த வசதி, 2012 முதல் நடைமுறையில் இருக்கிறது. மிகக் குறைந்த அளவுக்கு முதலீடு செய்பவர்களுக் கானது இந்தக் கணக்கு.
புதிய வரையறை ஒரே ஒரு 'டிமேட்' கணக்கு மட்டும் வைத்துக்கொண்டு, அதில் அதிகபட்சமாக இரண்டு லட்ச ரூபாய் வரை மட்டுமே முதலீடு செய்துள்ளவரே, 'அடிப்படை டிமேட்' க ணக்கு வைத்திருப்பவர்.
50,000 ரூபாய் வரை முதலீடு செய்திருப்பவர், 'டிமேட்' கட்டணமாக ஒன்றும் செலுத்த வேண்டாம். 50,001 முதல் 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்திருப்பவர் 100 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும்.
வழக்கமான 'டிமேட்' கணக்காக இருந்தால், ஆண்டொன்றுக்கு 300 முதல் 800 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்நிலையில் தான், தற்போது 'செபி' ஒரு திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி, இந்த 2 லட்சம் ரூபாய் மொத்த போர்ட்போலியோவைக் கணக்கிடுவதில், எவற்றையெல்லாம் நீக்கலாம் அல்லது சேர்க்கலாம் என்பதற்கான புதிய வரையறைகள் முன்வைக்கப்படுகின்றன.
மொத்த போர்ட்போலியோவில், 'ஜீரோ கூப்பன், ஜீரோ பிரின்சிபல்' கடன்பத்திரங்களின் மதிப்பை எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்தக் கடன் பத்திரங்களை வர்த்தகம் செய்யமுடியாது என்பதால், அதை கணக்கில் எடுத்துக்கொள்வதால் சிறு முதலீட்டாளர்களின் போர்ட்போலியோ மதிப்பு தேவையில்லாமல் உயர்ந்துவிடக் கூடும். அதனால் அதை நீக்கலாம்.
எப்படி, நிறுத்தி வைக்கப்பட்ட பங்குகளின் மதிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லையோ, அதேபோல், சந்தையில் இருந்து விலக்கப்பட்ட பங்குகளின் மதிப்பும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படக் கூடாது.
ஆனால், வர்த்தகமாகாத பங்குகளின் நாள் முடிவு விலை, போர்ட்போலியோ மதிப்பில் சேர்த்துக்கொள்ளப்படும். அதாவது அந்தப் பங்குகள் பல காரணங்களால் வர்த்தகமாகாமல் இருக்கலாம். ஆனால், அவையும் ஏதோ ஒரு வகையில் சந்தையில் நீடித்து இருப்பதால், அதன் மதிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்தப் பங்குகளை எல்லாம் பத்திரமாக சேமித்து வைத்திருக்கும், 'டி.பி.' எனப்படும் 'டிபாசிட்டரி பார்டிசிபன்ட்ஸ்'கள், ஒவ்வொரு காலாண்டிலும், அந்த 'டிமேட்' கணக்குகள், 'அடிப்படை டிமேட்'களா, அல்லது வழக்கமான 'டிமேட்'களா என்பதை தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
ஒருவேளை, ஒரு கணக்கில் தொடர்ச்சியாக 2 லட்சம் ரூபாய்க்குள் தான் முதலீட்டு மதிப்பு இருக்கிறது என்றால், இந்த டி.பி.கள், அதை தன்னிச்சையாக 'அடிப்படை டிமேட்' கணக்குகளாக மாற்றிவிட வேண்டும். இதனால், முதலீட்டாளர்கள் பெரிய அளவில் கட்டண சலுகை பெறுவர்.
ஒருவேளை 'அடிப்படை டிமேட்' கணக்கு வைத்திருக்கும் முதலீட்டாளர், தன்னுடைய கணக்கை வழக்கமான 'டிமேட்' கணக்காக மாற்றிக்கொள்ள விரும்பினால், அதற்கும் அவருக்கு அனுமதி தர வேண்டும்.
இந்த ஆலோசனைகள் நடைமுறைக்கு வருமானால், சிறு முதலீட்டாளர்கள் மேலும் உற்சாகம் கொள்வர். முதலீடு செய்வர் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த ஆலோசனைகளின் மீது, பொதுமக்களின் கருத்துகள் கோரப்பட்டுள்ளன.
பங்கு பத்திரங்களின் நகல் பங்கு பத்திரங்கள் தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்துவிட்டாலோ, அதற்கான நகலை பெறுவதற்கான நடைமுறைகளில் பல முக்கிய மாற்றங்களை செபி முன்மொழிந்துள்ளது.
முதல் தகவல் அறிக்கை போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்காமல், எளிய வழியில் நகல் பத்திரங்களை பெறுவதற்கான வரம்பு தற்போது 5 லட்சம் ரூபாயாக உள்ளது.
இதை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தலாம். 10 லட்சம் ரூபாய் வரையிலான முதலீடுகளுக்கு, முதலீட்டாளர்கள் இனிமேல் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார் அல்லது செய்தித்தாள் விளம்பரங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்கத் தேவையிருக்காது.
முதலீட்டாளர்களுக்கு நடைமுறை சிக்கல்களை குறைக்கவும், செலவை குறைக்கவும், பொதுவான உறுதிமொழி- மற்றும் -ஈட்டுறுதிப் பத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தவும் செபி பரிந்துரைத்துள்ளது.

