ADDED : நவ 26, 2025 12:51 AM

ரூபாயின் மதிப்பு, கடந்த நவம்பர் 21ம் தேதி, வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த நிலையில், நேற்று வர்த்தக முடிவில் சற்று சமநிலையுடன் காணப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் உறுதியான தலையீடு மற்றும் உள்நாட்டு பொருளாதாரத்தின் வலுவான காரணிகளால், ரூபாய் மீண்டும் ஸ்திரத்தன்மைக்குத் திரும்பியுள்ளது.
ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்த, கடந்த செப்டம்பரில் ரிசர்வ் வங்கி, நிகர அளவில் 791 கோடி டாலரை விற்பனை செய்துள்ளது. மேலும், ரூபாயைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை தொடரப்போவதாக சமிக்ஞை அளித்துள்ளது.
இந்தியாவின் தங்கம் கையிருப்பு, கடந்த எட்டு ஆண்டுகளில் 300 டன்கள் அதிகரித்து, தற்போது சுமார் 880 டன்னாக உள்ளது. இது நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
நுகர்வு அதிகரிப்பால், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 6.50 சதவீதமாகவும்; அடுத்த நிதியாண்டில் 6.70 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கி அதிகாரிகள், டிசம்பரில் வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருப்பது, ரூபாய் மீதான உலகளாவிய அழுத்தத்தை குறைத்துள்ளது.
தற்போது ரூபாயின் வர்த்தக வரம்பு 88.90 முதல் 90.20 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 88.80 என்பது வலுவான ஆதரவு நிலையாக இருக்கிறது.

