ADDED : நவ 09, 2025 02:25 AM

டிஜிட்டல் கோல்டு அல்லது இ--கோல்டு திட்டங்கள், தங்கள் கண்காணிப்பின் கீழ் வரவில்லை என, முதலீட்டாளர்களுக்கு செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்க இ.டி.எப்., தங்கம் சார்ந்த மியூச்சுவல் பண்டுகள், மற்றும் கமாடிட்டியில் தங்க டெரிவேட்டிவ் ஒப்பந்தங்கள் போன்ற முதலீட்டு திட்டங்கள், தங்கள் விதிமுறைகளுக்கு கீழ் வருவதாகவும், டிஜிட்டல் கோல்டு என்பது, பங்குகளோ அல்லது கமாடிட்டி டெரிவேட்டிவ்களோ அல்ல எனவும் செபி தெரிவித்துள்ளது.
செபியின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வர்த்தகம் நடப்பதால், முதலீட்டாளர்களுக்கு ரிஸ்க் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, பங்குச் சந்தைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதலீட்டாளர் பாதுகாப்பு முறைகள் எதுவும் பொருந்தாது எனவும், செபி தெரிவித்துள்ளது.
அண்மைக் காலமாக பல தங்க நகை கடைகள், நிறுவனங்கள் மற்றும் யு.பி.ஐ., செயலிகளும் தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைப்பதற்காக, டிஜிட்டல் தங்க திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதற்கு வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது .
நம் நாட்டில் கிட்டதட்ட எட்டு கோடி டிஜிட்டல் தங்க கணக்குகள் இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. தங்கத்தில் முதலீடு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது ஒருபக்கம் இருந்தாலும், இத்தகைய முதலீடுகள் உண்மையில் பாதுகாப்பானதா என்ற கேள்வியும் இல்லாமலில்லை. இதையடுத்தே செபி இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளது
டிஜிட்டல் கோல்டு பெரிய நிறுவனங்கள், நகைக் கடைகள் போன்றவை டிஜிட்டல் கோல்டு விற்பனை செய்துவருகின்றன. “பாதுகாப்பானது; திருடுபோகும் அபாயம் இல்லை; சுத்த தங்கம்; ஆபரணங்களை வாங்க கொடுக்கும் செய்கூலி, சேதாரம் போன்ற செலவுகள் இல்லை” எனக் கூறி, இந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.
நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு சமமான, 24 காரட் தங்கத்தை, நமது சார்பில் வாங்கி, சேமிப்பு கிடங்குகளில் காப்பீடு வசதியுடன் சேமித்து வைப்பதாக இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்த டிஜிட்டல் தங்கத்தை 10 ரூபாய்க்கும் வாங்கலாம். அந்த தங்கம் நமது ஆன்லைன் கணக்கில் இருக்கும். தேவைப்படும்போது அதை ஆன்லைன் வாயிலாகவே விற்று பணத்தை பெற முடியும்.
ஆனால், டிஜிட்டல் கோல்டுக்கும் 3 சதவீத ஜி.எஸ்.டி., உண்டு என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் நிறுவனம் எப்படிப்பட்டது என்பதும் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

