UPDATED : அக் 17, 2026 03:04 AM
ADDED : அக் 16, 2026 10:54 PM

டிப்ஸ் மியூசிக் வழங்கும்
ரூ.6.50 டிவிடெண்டு
டிப்ஸ் மியூசிக் நிறுவனம், தனது பங்குதாரர்களுக்கு நடப்பு 2026- - 27ம் நிதியாண்டுக்கான முதல் இடைக்கால டிவிடெண்டு தொகையாக ஒவ்வொரு பங்குக்கும், 6.50 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதை பெறுவதற்கான ரிக்கார்டு தேதி வரும் அக்டோபர் 22 எனவும், பங்குதாரர்களுக்கு வரும் நவம்பர் 12ம் தேதிக்குள் டிவிடெண்டு தொகை செலுத்தப்படும் எனவும் டிப்ஸ் மியூசிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டெக் மஹிந்திரா
பங்கு 8% உயர்வு
டெக் மஹிந்திரா நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளின்படி, புதிய டீல்களை கைப்பற்றியதும், செயல்பாட்டு லாப விகிதமும் சிறப்பாக உள்ளன. மேலும், ஹெச்.எஸ்.பி.சி., உள்ளிட்ட தரகு நிறுவனங்கள் சாதகமான ரேட்டிங் கொடுத்துள்ளதால், நேற்று வர்த்தகத்தில் டெக் மஹிந்திரா பங்கு விலை 8 சதவீதம் மேல் உயர்ந்து, வர்த்தக முடிவில் 1,790 ரூபாய்க்கு நிறைவடைந்தது. இப்பங்கு 4 நாட்களில் கிட்டத்தட்ட 22 சதவீதம் உயர்ந்துள்ளது.
பேஷ்வா வீட் பங்கு
20% இறங்கியது
ஐ.பி.ஓ.,வில் 'பேஷ்வா வீட்' பங்குகள் 101 ரூபாய்க்கு வெளியிடப்பட்ட நிலையில், அக்., 1ம் தேதி பங்கு சந்தையில் 100 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டன. முதல் நாளில் இருந்தே தினமும் இதன் பங்கு விலை 5 சதவீதம் சரிந்து வந்தது. இந்நிலையில், பங்குக்கான 'லோயர் சர்கியூட்' விகிதம் 20 சதவீதமாக மாற்றப்பட்டதை தொடர்ந்து, நேற்று பங்கு விலை 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 53.20 ரூபாயாக நிறைவடைந்தது.
நெஸ்லே இந்தியா
8% சரிவு
நெஸ்லே இந்தியா நிறுவனம் செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் வருவாய் வளர்ச்சி மந்தமடையக்கூடும் என்று ஹெச்.எஸ்.பி.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், நேற்று முன்தினமே நெஸ்லே இந்தியா பங்கு 8 சதவீதம் சரிந்தது. நேற்று மீண்டும் கிட்டத்தட்ட 2 சதவீதம் வரை இறங்கி, வர்த்தகம் முடிவில் 1,265.50 ரூபாய்க்கு நிறைவடைந்தது.
இந்தோனேசிய சந்தை
11% வீழ்ச்சி
இந்தோனேசியா 'வளரும் சந்தை' என்ற அந்தஸ்தை இழக்க நேரிடும் எனவும், அதனால் முக்கிய சர்வதேச ஈக்விட்டி குறியீடுகளில் இருந்து நீக்கப்படலாம் எனவும் எம்.எஸ்.சி.ஐ., நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் விற்பனை அழுத்தம் அதிகரித்து, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் இந்தோனேசிய பங்கு சந்தை 11 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது.
